ஈரானின் புதிய உச்சத் தலைவருக்குக் கடுமையான காயங்கள் எனத் தகவல்

ஈரானின் புதிய உச்சத் தலைவருக்குக் கடுமையான காயங்கள் எனத் தகவல்

2 mins read
ea0ba89c-c10d-4c51-a07a-5bbafa69b160
ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: போரின் தொடக்கத்தில் தம் தந்தையார் கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான முக மற்றும் கால் காயங்களிலிருந்து ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி இன்னும் குணமடைந்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த மூன்று பேர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, மத்திய டெஹ்ரானில் உள்ள உச்சத் தலைவரின் வளாகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் திரு காமெனியின் முகம் சிதைந்துபோனதாகவும், அவரது ஒன்று அல்லது இரண்டு கால்களிலும் குறிப்பிடத்தக்கக் காயம் ஏற்பட்டதாகவும் அந்த மூன்று பேரும் தெரிவித்தனர்.

இருப்பினும், 56 வயதான காமெனி, தனது காயங்களிலிருந்து மீண்டு வருவதாகவும் மனரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்காகத் தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பாத நபர்கள் தெரிவித்தனர்.

காணொளிக் கருத்தரங்கு

அவர் காணொளிக் கருத்தரங்கு மூலம் மூத்த அதிகாரிகளுடனான கூட்டங்களில் பங்கேற்பதாகவும் போர் மற்றும் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்த முடிவெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கூறினர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி, அமெரிக்காவுடனான முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் இத்தருணத்தில், பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஈரான் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கும் இந்த நேரத்தில், திரு காமெனியின் உடல்நிலை அவரை அரசு விவகாரங்களை நிர்வகிக்க அனுமதிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

திரு காமெனியின் நெருங்கிய வட்டாரத்தினருக்கு நெருக்கமானவர்களின் தகவல்களே, பல வாரங்களாக இல்லாத அளவுக்குத் தலைவரின் உடல்நிலை குறித்த மிக விரிவான விளக்கத்தை அளிக்கின்றன. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் அவர்களின் விளக்கங்களைத் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியவில்லை.

திரு காமெனியின் காயங்களின் அளவு குறித்தோ அவர் இதுவரை எந்தப் புகைப்படங்களிலோ ஒலிப்பதிவுகளிலோ தோன்றாததற்கான காரணம் குறித்தோ ராய்ட்டர்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு, ஈரானின் ஐக்கிய நாட்டுத் தூதரகம் பதிலளிக்கவில்லை.

திரு காமெனி ஒரு காலை இழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக, அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த ஒரு வட்டாரம் ராய்ட்டர்சிடம் தெரிவித்தது.

திரு காமெனியின் உடல்நிலை குறித்துக் கருத்துத் தெரிவிக்க அமெரிக்க உளவுத்துறை மறுத்துவிட்டது. இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகம் ராய்ட்டர்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்