மினியபொலிஸ்: மினசோட்டாவின் மினியபொலிஸ் நகரின் ஆளுநருக்கான போட்டியிலிருந்து விலகுவதாகக் குடியரசுக் கட்சி வேட்பாளர் கிரிஸ் மேடல் அறிவித்துள்ளார்.
மினியபொலிஸ் நகரில் குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னிட்டு ஆளுநருக்கான தேர்தலிலிருந்து விலகுவதாகத் திரு மேடல் சொன்னார்.
அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளில் இரண்டு குடிமக்கள் உயிரிழந்தனர்.
சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தற்காப்பதில் பெயர் பெற்ற மினியபொலிஸ் வழக்கறிஞரான திரு மேடல், குடியேறிகளுக்கு எதிராகத் தமது கட்சி நடந்துகொண்ட விதத்தைச் சாடினார்.
“அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நான் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது. அவ்வாறு செய்யும் கட்சியின் உறுப்பினராகவும் என்னால் தொடர முடியாது,” என்று சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை அவர் பதிவிட்டார்.
இம்மாதம் 7ஆம் தேதி, மினியபொலிசைச் சேர்ந்த ரெனே கூட் என்ற 37 வயது பெண்ணைச் சுட்டுக்கொன்ற ஜோனத்தன் ரோஸ் என்ற குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் அதிகாரிக்கு சட்ட ரீதியான ஆலோசனை வழங்கியதற்காகத் திரு மேடல் அதிகம் குறைகூறப்பட்டார்.
அதையடுத்து 37 வயது தாதி அலெக்ஸ் பிரிட்டியை அதிகாரிகள் சுட்டுக்கொன்றதை அடுத்து ஆளுநருக்கான போட்டியிலிருந்து விலக திரு மேடல் முடிவெடுத்தார்.
திரு மேடல் பொதுமக்கள் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் நிலைநிறுத்துவதில் அதிகமாகத் தம்மை முன்னிலைப்படுத்திக்கொண்டார்.
இருப்பினும், திரு டிரம்ப் அமல்படுத்திய மத்திய குடிநுழைவுச் சோதனை நடவடிக்கை உண்மையான குற்றவாளிகளை முடக்குவதற்குப் பதிலாக எல்லைமீறி சென்றுவிட்டதாகத் திரு மேடல் குறிப்பிட்டார்.
அத்தகைய நடவடிக்கை அமெரிக்க குடிமக்கள் மத்தியில் அச்சத்தையும் நிறப் பேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் திரு மேடல் சொன்னார்.
மினியபொலிசில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் மினசோட்டாவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் வெற்றிபெறுவது அசாத்தியமான ஒன்றாக மாறிவிட்டது என்றார் திரு மேடல்.


