வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றம், அந்நாட்டின் குடியரசுக் கட்சியிடம் முழுமையாகப் போகும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செனட் சபையில் அக்கட்சி ஏற்கெனவே பெரும்பான்மை வாக்குகளை வென்றுவிட்டது. பிரதிநிதிகள் சபையையும் (House of Representatives) தன்வசம் கொண்டுவர அக்கட்சிக்கு இன்னும் ஒருசில இடங்கள்தான் தேவை.
பிரதிநிதிகள் சபையைத் தங்கள்வசம் கொண்டுவர ஒரு கட்சிக்கு 218 இடங்கள் தேவை. ஆகக் கடைசி நிலவரப்படி, அடுத்த அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப்பின் குடியரசிக் கட்சியிடம் 214 இடங்கள் இருப்பதாக பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் தேர்தலில் திரு டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிசின் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதிநிதிகள் சபையில் 205 இடங்கள் உள்ளன.
தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து திரு டிரம்ப், எலீஸ் ஸ்டெஃபனிக் என்பவரை ஐக்கிய நாட்டு சபைக்கான அமெரிக்கத் தூதராக நியமித்துள்ளார். மேலும், எல்லை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு டாம் ஹோமனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திரு டிரம்ப் தெரிவித்தார்.
100 இடங்களைக் கொண்ட செனட் சபையில் குடியரசுக் கட்சி குறைந்தது 52 இடங்களை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

