காலி, இலங்கை: இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் உயிர்பிழைத்த ஈரானிய மாலுமிகள் இலங்கையின் காலி நகரில் உள்ள மருத்துவமனையில் குணமடைந்து வருகின்றனர்.
அந்தத் தாக்குதலில் குறைந்தது 87 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) என்ற ஈரானிய போர்க்கப்பலிலிருந்து புதன்கிழமை (மார்ச் 4) அதிகாலையில் அழைப்பு வந்ததாகவும் அங்குச் சென்றடைந்த ராணுவ மீட்புப் பணியாளர்கள் 87 சடலங்களைக் கொண்டுவந்ததாகவும் காலி நகரின் தேசிய மருத்துவமனையில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பலில் எஞ்சியிருக்கும் ஏறக்குறைய 60 பேரைத் தேடும் பணி வியாழக்கிழமை (மார்ச் 5) தொடர்வதாக அவர்கள் கூறினர்.
மீட்கப்பட்ட 32 மாலுமிகள் சிறு காயங்களுக்காகச் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானியப் போர்க் கப்பல்மீது நடத்திய தாக்குதல், ஈரானைத் தாண்டி, தென்கிழக்காசியா வரை போர் தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதைக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த புதன்கிழமை (மார்ச் 4) இலங்கையின் தெற்குக் கடற்பரப்புக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் அடையாளம் தெரியாத அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானியப் போர்க் கப்பலைத் தாக்கியதைத் தொடர்ந்து, அந்தக் கவலைகள் எழுந்துள்ளன.
முன்னதாக, ஈரானியக் கடற்படையை அழிப்பது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் குறிக்கோள்களில் ஒன்று என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் வியாழக்கிழமை (மார்ச் 5) நிலவரப்படி, ஆறாம் நாளை எட்டியது.

