கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் வீட்டுக்காவலில் தமக்கு எஞ்சிய தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்காக வீடு திரும்பும்போது, தாம் அமைச்சர் பதவியிலிருந்து விலகும் முடிவு அமலுக்கு வரும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் அன்வார் இப்ராகிமை திங்கட்கிழமை (செப்டம்பர் 28) நேரில் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது தமது பதவி விலகல் கடிதத்தை அவரிடம் நேரடியாகச் சமர்ப்பித்ததாகவும் அமைச்சர் லோக் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 29) ‘மலேசியக் கடல்துறை வாரம் 2026’ நிகழ்வைத் தொடக்கிவைத்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் லோக் உரையாற்றினார்.
“பிரதமர் அன்வாருடன் ஆலோசனையும் நடத்தினேன். அந்த ஆலோசனையின்போது, தற்போதைக்கு எனது பொறுப்புகளைத் தொடர்ந்து செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். எனவே, எனது பதவி விலகல் எந்தக் கணத்தில் அமலுக்கு வரும் என்பதைப் பிரதமரே முடிவு செய்வார்,” என்று கூறினார்.
அதேவேளையில், ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரான அமைச்சர் லோக், தமது பதவிக் காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட கால வரையறை இருக்கவேண்டும் என்பதைப் பிரதமரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார்.
செப்டம்பர் 18ஆம் தேதி பொது மன்னிப்பு மன்றத்தால் நஜிப்புக்கு நிபந்தனையுடன்கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த நிபந்தனையுடன்கூடிய மன்னிப்பின்கீழ், 50 மில்லியன் ரிங்கிட் (S$15.64) அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு உட்பட்டு, எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலத்தை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வரை அவர் வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்படுகிறார்.
நஜிப் தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்காக வீடு திரும்பும் அதே நாளில் தமது பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார். இதுவரை அது நிகழவில்லை என்பதால் தாம் இன்னமும் பணியில் தொடர்வதாகவும் தமக்கு மாற்றாக வேறு எவரும் இன்னும் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
