கோலாலம்பூர்: சர்ச்சைகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக ஒய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹாலின் அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைவர் அசாம் பாக்கியின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.
அதையடுத்து, மே மாதம் 13ஆம் தேதியன்று திரு அப்துல் ஹாலிம் ஆணையத்தின் தலைவராகச் செயல்படுவார்.
திரு அப்துல் ஹாலிம் ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றவர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் புளூம்பெர்க் நியூஸ் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளைத் தொடர்ந்து திரு அசாம் பாக்கி கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார்.
நிதிச் சேவை நிறுவனம் ஒன்றில் அவர் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு, அரசு அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட அதிகமாக இருந்தது குறித்து அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்றோர் அறிக்கையில், தொழிலதிபர்கள் குழு ஒன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து நிறுவனங்களின் நிர்வாகிகளை மிரட்டுவதாகவும் அவர்களை நிறுவனங்களிலிருந்து வெளியேற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த அறிக்கைகளில் உள்ள குற்றச்சாட்டுகளைத் திரு அசாம் மறுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஊழல், முறைகேடு, பதவியைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் முக்கிய அமைப்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து திறம்படச் செயல்படுவதை உறுதி செய்ய இந்தப் பதவி மிகவும் முக்கியமானது என்று கூறிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 23) தெரிவித்தார்.
ஆணையத்தின் தலைமை ஆணையர், பிரதமரின் ஆலோசனையின் பேரில் மன்னரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24), புதிய தலைவருக்கான பரிந்துரையைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மன்னரிடம் முன்வைத்ததாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

