கோலாலம்பூர்: காவல்துறை மற்றும் வங்கி எச்சரித்தும் இணைய மோசடியில் சிக்கி 49,040 வெள்ளி இழந்துள்ளார் 57 வயது மலேசியர்.
சமூக ஊடகத்தில், ஹாங்காங்கில் உள்ள அழகிய பெண் ஒருவர் கர்ப்பமாக விந்தணுக்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. சிறந்த விந்தணு கொண்டவர்களுக்கு 327,940 வெள்ளி பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை நம்பிய அந்த 57 வயது டான், விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணைத் தொடர்புகொண்டார்.
அதன் பின்னர் விமானச் சீட்டுகள், காப்பீடு எனப் பலமுறை மோசடியாளர்கள் டானிடமிருந்து பணத்தை வசூலித்தனர்.
டானின் வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்த பணப்பரிவர்த்தனையை அறிந்த வங்கி ஊழியர்கள் அவரை எச்சரித்தனர்.
காவல்துறை அதிகாரிகளும் இது மோசடி நடவடிக்கை என்று டானிடம் பேசினர். இருப்பினும் அவர் மோசடியாளர்களுக்குத் தொடர்ந்து பணம் அனுப்பினார்.
ஒருகட்டத்தில் தாம் ஏமாற்றப்படுவது அறிந்த டான் மோசடியாளர்களிடம் பேசுவதை நிறுத்தினார். அதன்பின்னர் அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார். தம்மைப் போல் மற்றவர்களும் ஏமாறாமல் இருக்கப் புகார் அளித்ததாக டான் தெரிவித்தார்.
சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் உள்ள பெண்ணின் புகைப்படம் அவருக்குத் தெரியாமலேயே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை கூறியது.