கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய முன்னணி (பிஎன்) கூட்டணி, தெற்கு மாநிலமான ஜோகூரில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், வரவிருக்கும் திடீர் தேர்தலை நாடு தழுவிய மறுமலர்ச்சிக்கான ஒரு தொடக்கப் புள்ளியாக நம்பியுள்ளது.
தேசிய முன்னணி கூட்டணித் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி, ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 7), ஜோகூரில் கிடைக்கும் வெற்றியானது மாநிலத்தில் கூட்டணியின் செல்வாக்கை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு பரந்த ‘நீல அலை’ மீண்டும் வருவதற்கு ஒரு கருவியாகச் செயல்பட்டு, ஒரு முக்கிய அரசியல் சக்தியாக அதன் நிலையை வலுப்படுத்தும் எனக் கூறியதாக மலேசிய செய்தி நிறுவனமான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நீல நிறம் தேசிய முன்னணியின் அதிகாரபூர்வ நிறமாகும். மேலும் அதன் சின்னத்திலும் அது பயன்படுத்தப்படுகிறது.
“ஜோகூர் மாநிலத் தேர்தல்தான் உண்மையான தீர்மானப் புள்ளி. ஜோகூரிலிருந்து நாம் வலிமையை மீண்டும் கட்டியெழுப்புகிறோம். ஜோகூரிலிருந்து போராட்டத்தின் சுடரை மீண்டும் பற்றவைக்கிறோம். மேலும், ஜோகூரிலிருந்து நீல அலை மீண்டும் வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறோம்,” என்று இஸ்கந்தர் புத்ரியில் உள்ள எடுசிட்டி உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்ற ஜோகூர் தேசிய முன்னணி தேர்தல் செயலமைப்புத் தொடக்க விழாவில் ஸாஹிட் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
“தேசிய முன்னணி இன்னும் பொருத்தமானதாகவும், வலிமையானதாகவும், மக்களின் தேர்வாகவும் தொடர்கிறது என்ற தெளிவான செய்தியை நாங்கள் நாட்டுக்கு அனுப்ப விரும்புகிறோம்,” என்றார் அவர்.
தற்போது மத்திய அரசாங்கத்தில், தேசிய முன்னணி கூட்டணி பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்தில், அவரது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மற்றும் போர்னியோவைச் சேர்ந்த கட்சிகளுடன் இணைந்து அங்கம் வகிக்கிறது.
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பை (அம்னோ) முக்கியத் தூணாகக் கொண்ட தேசிய முன்னணிக் கூட்டணி, மத்திய அரசாங்கத்தில், பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்து செயல்பட்டாலும், ஜோகூரில் அவை தனித்து களம் காண்கின்றன.

