துபாய்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, மத்திய கிழக்கில் விமானச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து விமானச் சேவை நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன.
சிங்கப்பூரிலிருந்து துபாய் செல்லும் விமானப் பயணங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.
ரஷ்யா-உக்ரேன் போர் காரணமாக அந்நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
இதனால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கு இடையிலான விமானச் சேவைக்கு மத்திய கிழக்குப் பயணப் பாதை மிகவும் முக்கியமானதாக இருந்து வந்தது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர் வெடித்துள்ள நிலையில் இப்பாதையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான், ஈராக், சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளியில் விமானங்கள் பறக்கவில்லை என்பதை ஃபிளைட்ரேடார்24 இணையப்பக்கம் காட்டியது.
ஜூன் 22, 23ஆம் தேதிகளில் துபாய், ரியாத் ஆகிய நகரங்களுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் விமானப் பயணங்களை ரத்து செய்ததாக ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் விமானச் சேவை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) தெரிவித்தது.
துபாய், டோஹா ஆகிய நகரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) செல்லும், அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகளை ரத்து செய்ததாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுவனம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
நிலைமையைக் கண்காணித்து வருவதாக அது தெரிவித்தது.
அதன் பின்னரே, விமானச் சேவைகளைத் தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியது.