சிலாங்கூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி மன்றம், ஈரச் சந்தை கடைக்காரர்கள் பிடிக்கும் ஒவ்வோர் எலிக்கும் 3 ரிங்கிட்டை (90 காசு) வெகுமதியாக வழங்குகிறது.
அந்த எலி ஒழிப்பு இயக்கத்தின் மூலம் பெக்கான் அம்பாங் சந்தையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எலிகள் அற்ற வட்டாரமாக மாற்ற திட்டமிடப்படுவதாக அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் ஜூலை 9ஆம் தேதி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.
“சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றுக்காக எலிகளை ஒழிக்கும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைவோம்,” என்று மற்றொரு பதிவில் காண முடிகிறது.
இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கிய எலி ஒழிப்பு இயக்கம் 25ஆம் தேதி வரை தொடரும்.
வார நாள்களில் காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை பிடிக்கப்படும் எலிகளை ஈரச் சந்தையில் கொடுத்து அதற்குப் பதிலாகக் கடைக்காரர்கள் காசைப் பெறலாம்.
சாபா மாநிலத்தின் கோத்தா கினபாலுவில் உள்ள மத்திய சந்தையில் அதேபோல எலிகளைப் பிடித்து தருவோருக்கு 2 ரிங்கிட் கொடுக்கப்படுகிறது.
கோத்தா கினபாலு சிட்டி ஹால், கடந்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 1ஆம் தேதி வரை எலி ஒழிப்பு இயக்கம் இடம்பெற்றதாகத் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 26ஆம் தேதி குறிப்பிட்டது.
பொதுச் சுகாதாரம், நகரின் சுற்றுச்சூழல், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எலிகளின் பெருக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இயக்கம் முயல்கிறது.
தொடர்புடைய செய்திகள்
எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைப் பிடித்துக் கொடுப்போருக்கு மலேசிய அதிகாரிகள் கடந்த ஆண்டுகளில் வெகுமதி வழங்கினர்.
2019ஆம் ஆண்டு ஜோகூரில் உள்ள இஸ்கந்தர் புத்ரி நகராட்சி மன்றம், வீடுகளில் பிடிக்கப்பட்ட ஒவ்வொரு எலிக்கும் 1 ரிங்கிட்டை வெகுமதியாகக் கொடுத்தது.