மின்னுவதெல்லாம் பொன்னல்ல! தங்கத்தில் ‘ரீனியம்’

மின்னுவதெல்லாம் பொன்னல்ல! தங்கத்தில் ‘ரீனியம்’

2 mins read
9c755bcb-6233-4aea-966a-b6d44a8f6481
மோசடிக்காரர்கள் ரீனியம் தூள் கலந்த தங்கத்தை விற்றனர். - படங்கள்: சியான்யூ/தாவ்பாவ்

ஷென்சென்: சீனாவில் போலித் தங்கம் விற்கப்படுவது குறித்து சிசிடிவி எச்சரித்துள்ளது.

எளிதில் கண்டுபிடிக்க முடியாத மிக மலிவான தங்கத்தைப் போன்ற ரீனியம் என்ற உலோகம் கலக்கப்படுவதாக அது கூறியுள்ளது.

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் ரீனியம் கலந்த தங்கம் சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு செம்பு, டங்ஸ்டன் போன்ற உலோகங்கள் தங்கத்துடன் கலந்து விற்கப்பட்டன.

பெட்ரோலிய சுத்திகரிப்புக்கும் இதர தொழில்துறைகளிலும் ரீனியம் பயன்படுத்தப்படுகிறது. சில இணையத் தளங்களில் ஒரு கிராம் ரீனியம் தூள் 170 யுவானுக்கு (S$32) விற்கப்படுகிறது. ஆனால் ஒரு கிராம் தூயத் தங்கத்தின் விலை 1,000 யுவானுக்கும் மேலாகும்.

2025 ஆகஸ்ட் மாதம் ஸெஜியாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், தங்கத்துடன் ரீனியத் தூளைக் கலந்து சில்லறை விற்பனையாளர் உட்பட பல வாடிக்கையாளர்களை ஏமாற்றியது. அவ்வகையில் 800,000 யுவான் வரை ஏமாற்றிய அக்கும்பலைக் காவல்துறை கைதுசெய்தது.

இதையடுத்து, போலித் தங்க விற்பனை குறித்து அதிகாரிகள் எச்சரித்தனர்.

நாடு முழுவதும் உள்ள நகை வணிகர்களிடமிருந்து அந்தக் கும்பல் பணம் பெற்றிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

2025ல் நகைக்கடை உரிமையாளரிடம் ஒருவர் ரீனியம் கலந்த கழுத்துச் சங்கிலியை விற்றார். ஆனால், அது உண்மையான தங்க நகைபோல இல்லாததால் காவல்துறையிடம் உரிமையாளர் புகாரளித்தார். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கும்பலின் நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

2026ல் இணையத் தளங்களில் மீண்டும் ரீனியம் கலந்த தங்க விற்பனை குறித்த விளம்பரங்கள் தலைகாட்டியதால் போலித் தங்கம் குறித்து சிசிடிவி மீண்டும் எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்