வியன்னா: ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் காண்டாமிருகம் ஒன்று தாக்கியதில் விலங்கியல் தோட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மற்றோர் ஊழியர் காயமடைந்ததாக விலங்கியல் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலையில் விலங்குகளுக்கு உணவு கொடுக்கப்பட்டு, பூச்சிக்கொல்லி மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டபோது சம்பவம் நேர்ந்ததாக சால்ஸ்பர்க் ஹெல்பிராண் விலங்கியல் தோட்டத்தின் இயக்குநர் கூறினார்.
சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர். உயிரிழந்த பெண்ணுக்கு நெஞ்சில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காயமடைந்த ஆண் ஊழியர் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டுசெல்லப்பட்டார். அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனக் கூறப்பட்டது.
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தைச் சேர்ந்த அப்பெண் ஊழியர், காண்டாமிருகங்களைக் கவனிப்பதில் நிபுணர், அனுபவமிக்கவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களைத் தாக்கிய காண்டாமிருகத்தின் பெயர் யேட்டி. அந்த விலங்கியல் தோட்டத்தில் உள்ள அனைத்து காண்டாமிருகங்களும் அங்கு நீண்டகாலமாக இருப்பதாகவும் அவை காப்பாளர்களுடன் நன்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.