கோஸ்டா ரிக்கா பொதுத் தேர்தலில் வலசாரி வேட்பாளர் ஃபெர்னான்டஸ் வெற்றி

கோஸ்டா ரிக்கா பொதுத் தேர்தலில் வலசாரி வேட்பாளர் ஃபெர்னான்டஸ் வெற்றி

2 mins read
d09bad89-658a-4cf2-a0f8-cde2872063f2
கோஸ்டா ரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வலசாரி வேட்பாளர் லோரா ஃபெர்னான்டஸ் அபார வெற்றி பெற்றார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

சென் ஹோசே: கோஸ்டா ரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் லோரா ஃபெர்னான்டஸ் அபார வெற்றி பெற்றார். அவரது ஆளுங்கட்சி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைத் தட்டிச்செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குகளின் கணக்கெடுப்பின் முடிவில் திருவாட்டி ஃபெர்னான்டசுக்கு 88.43 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பிலும் முன்னணி வகித்த திருவாட்டி ஃபெர்னான்டசுக்கு வெற்றிபெற கூடுதலாக 40 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே தேவைப்பட்டது.

பதவிக் காலம் முடிந்து வெளியேறவுள்ள அதிபர் ரோட்ரிகோ ‌‌‌ஷாவேசுக்கு நெருக்கமானவராக இருந்த திருவாட்டி ஃபெர்னான்டஸ் கடுமையான பாதுகாப்புக் கொள்கைகளைக் கட்டிக்காத்து, மக்களுக்கான கொள்கைகளை முன்னிறுத்தவிருப்பதாக வாக்குறுதி அளித்தார்.

கோஸ்டா ரிக்காவில் பதவியிலிருந்து வெளியேறிய ஒருவர் மீண்டும் அரசாங்கப் பதவியை வகிப்பதற்கு அனுமதி இல்லை என்றபோதும் திருவாட்டி ஃபெர்னான்டஸ் திரு ‌‌‌ஷாவேசைத் தமது அரசாங்கத்தில் ஈடுபடுத்தவிருப்பதாகக் கூறினார்.

மாற்றம் என்பது ஆழமானது என்றும் பழைய நிலைக்கு மாறாதது என்றும் தமது வெற்றி உரையில் திருவாட்டி ஃபெர்னான்டஸ் கூறினார். கோஸ்டா ரிக்கா புதிய அரசியல் சகாப்தத்துக்குள் நுழைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1984ஆம் ஆண்டின் உள்நாட்டுப் போருக்குப் பின் தொடங்கிய மத்திய அமெரிக்க நாட்டின் இரண்டாவது குடியரசு கடந்த காலம் என்ற திருவாட்டி ஃபெர்னான்டஸ், மூன்றாவது குடியரசை உருவாக்குவது நமது கையில்தான் உள்ளது என்றார்.

திருவாட்டி ஃபெர்னான்டசின் அரசுரிமை மக்கள் கட்சி, நாடாளுமன்றத்தில் உள்ள 57 இடங்களில் 30 இடங்களையாவது கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் எட்டு இடங்களை மட்டுமே கொண்டுள்ளது.

3.7 மில்லியன் வாக்காளர்கள் கொண்ட கோஸ்டா ரிக்காவில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் மக்களின் கவலைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

திரு ‌‌‌ஷாவேசின் ஆட்சியின்போது குற்றச் செயல்கள் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டபோதும் அவருக்கான மக்கள் செல்வாக்கு குறையவில்லை.

குறிப்புச் சொற்கள்