ரிங்கிட் மதிப்பில் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைச் சரிசெய்ய தான் தயாராக இருப்பதாக மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா (பிஎன்எம்) தெரிவித்துள்ளது.
நாணய மதிப்பில் குறுகியகால ஏற்ற இறக்கத்தையும் தாண்டி சந்தைகள் பார்க்க வேண்டும் என்று அது கூறியது.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு மத்திய வங்கி மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில், “தொடர்ந்து விழிப்புடன் உள்ள பிஎன்எம், தேவைக்கேற்ப பணப்புழக்கத்தை வழங்க தயாராக உள்ளது,” என்றது.
அக்டோபரில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 5.8 விழுக்காடு சரிந்தது. இது, ஏறக்குறைய எட்டு ஆண்டுகளில் ஆகப்பெரிய மாதாந்தர சரிவு.
எனினும், இந்த ஆண்டு வளர்ந்துவரும் சந்தைகளில் ஆகச் சிறப்பாக செயல்படும் நாணயங்களில் ஒன்றாக ரிங்கிட் விளங்குகிறது. வல்லுநர்களின் கணிப்பை பொருளியல் வளர்ச்சி விஞ்சியதே இதற்குக் காரணம்.
உள்நாட்டுத் தேவையும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் முதலீடுகளும் அதிகரித்தன. வரவுசெலவுப் பற்றாக்குறையைக் குறைக்க, எரிபொருள் மானியங்களை நிறுத்த மலேசிய அரசாங்கம் திட்டமிடுகிறது.