புத்ராஜெயா: மலேசியாவின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை கடுமையான புகைமூட்டம் நிலவக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) எச்சரித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, உடல்நலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மெர்டேகா திடலில் நடைபெறவிருந்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ‘தேசிய தின உரை’ புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இம்மாற்றம் தேசிய தினக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தைப் பாதிக்காது எனத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்கு சுமத்ரா, மேற்குக் கலிமந்தான் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள காட்டுத்தீயின் தாக்கத்தாலும் தென்மேற்குக் காற்றின் திசை காரணமாகவும் புகைமூட்டம் அதிகரித்துள்ளதாக மையத்தின் தலைமை இயக்குநர் முகமது ஹிஷாம் தெரிவித்தார்.
குறிப்பாக சரவாக் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் காற்றுத் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டும். ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலைக்கு மோசமடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, சபா ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படலாம்.
அரசதந்திர வழிகள்மூலம், எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினைக்குத் தீர்வு காண மலேசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை மழைக்குத் தனது வான்வெளியைப் பயன்டுத்த மலேசியாவுக்கு இந்தோனீசியா அனுமதியளித்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆசியான் கூட்டமைப்பின் உதவியையும் திரு அன்வார் நாடியுள்ளார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய தின அணிவகுப்பு நடத்துவது குறித்துச் சுகாதார, சுற்றுச்சூழல் துறைகளின் ஆலோசனையின் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகாரபூர்வத் தகவல்களைத் தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


