டெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்துள்ள நிலையில் எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது.
ஆசியாவின் திங்கட்கிழமைக் (மார்ச் 2) காலை வர்த்தகத்தில், உலகளாவிய எண்ணெய்க் குறியீடான ‘பிரென்ட்’ கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 82.37 அமெரிக்க டாலராக இருந்தது. சனிக்கிழமை வர்த்தகம் முடிவுற்ற நிலையில் இருந்த 72.87 அமெரிக்க டாலரைவிட இது 9.50 அமெரிக்க டாலர் அல்லது 13 விழுக்காடு அதிகம்.
சிங்கப்பூரில் காலை மணி 7:05 நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 79.34 அமெரிக்க டாலராக இருந்தது. அது 6.47 அமெரிக்க டாலர் அல்லது 8.88 விழுக்காடு அதிகம்.
அமெரிக்க எண்ணெய்க் குறியீடான ‘யுஎஸ் வெஸ்ட் டெக்சஸ் இம்மிடியெட்’ கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 72.38 அமெரிக்க டாலராக இருந்தது. இது முன்பைவிட 5.36 அமெரிக்க டாலர் அல்லது 8 விழுக்காடு அதிகம்.
உலகில் அதிக அளவில் எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் ஈரானும் ஒன்று. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஏறக்குறைய 20 விழுக்காடு ஈரானியக் கடற்பகுதியின் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. ஈரான் மீதான போருக்கு இடையில் எண்ணெய், எரிவாயு வர்த்தகம் நிலைகுத்திப் போயிருக்கிறது.
முக்கிய நீர்வழிகள் தொடர்ந்து திறந்திருப்பதாக ஈரானிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மூன்று எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியதாகவும் அவர்கள் கூறினர். போர்ப் பதற்றம் தொடரும் சூழலில் கப்பல் உரிமையாளர்களும் வர்த்தகர்களும் வணிக நடவடிக்கைகளைச் சிறிது காலம் நிறுத்திவைக்க முடிவெடுத்துள்ளனர்.
‘பிரென்ட்’ குறியீடு 100 அமெரிக்க டாலரைத் தொடக்கூடும் என்று வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர். ஈரான் மீதான போர் உலக எண்ணெய்ச் சந்தையில் ஆபத்தான புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது.

