ஜோகூர் பாரு: உணவு விலைகள் அதிகரித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புலம்பும் வேளையில், அவற்றின் விலைகளை மேலும் உயர்த்துவதற்குப் பதிலாக உணவு அளவைக் குறைக்க ஜோகூர் பாருவில் ரமலான் சந்தை விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வர்த்தகம் தாக்குப்பிடிக்கும் நிலையில் இருக்க வேண்டுமெனில் உணவு, பானங்களின் அளவை தாம் குறைக்க வேண்டியுள்ளதாக வர்த்தகர் முகம்மது இஸாம் இப்ராகிம் கூறினார்.
“ரமலான் சந்தைகளில் உணவு மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், விலைவாசி அதிகரித்துள்ளதால், எங்களால் இனி அவ்வாறு செய்ய இயலாது,” என்றார் அவர்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப உணவு அளவை வழங்கி, அதற்கேற்ப தாம் கட்டணம் விதிக்கவுள்ளதாக வர்த்தகர் ஃபாத்திமா சருதீன், 36, கூறினார்.
“உணவுத் தயாரிப்புப் பொருள்களின் விலையேற்றத்திற்கு மேலாக, ரமலான் சந்தையில் கடையை வாடகைக்கு எடுக்கும் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் உணவு விலைகள் உயர்ந்துள்ளன,” என்றார் அவர்.
“எங்களால் பழைய விலையில் அதே அளவு உணவை வழங்க இயலாது. சிறிய அளவை வழங்கவே என்னால் முடியும்,” என்று அவர் சொன்னார்.