இஞ்சியோன்: தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் அந்நாட்டின் பிரபல கூப்பாங் நிறுவனத்தின் கிடங்கில் ஏற்பட்ட தீயைத் திட்டமிட்ட நேரத்துக்குள் தீயை அணைக்க முடியாமல் போனதால் கட்டடம் இடிந்துவிழும் ஆபத்து எழுந்தது. அதனால் அருகிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஒருவேளை கட்டடம் இடிந்துவிழுந்தால் சுற்றியுள்ள வர்த்தகக் கட்டடங்கள், ஆலைகள் போன்றவை பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 18) அதிகாலை 6.54 மணிக்கு சியோஹே-கு பகுதியில் உள்ள 299,000 சதுர மீட்டர் பரப்பளவிலான கட்டடத்தின் ஆறாவது தளத்தில் தீ மூண்டது. பிறகு தீ ஏழாவது தளத்துக்கும் பரவியதாக இஞ்சியோன் தீயணைப்புப் பிரிவின் தலைமையகம் தெரிவித்தது.
கட்டடத்தில் இருந்த 121 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஊழியர்களில் ஒருவர் புகைச் சுவாசித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். களைப்படைந்த வேறொருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது.
முதலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தாங்கள் திட்டமிட்டதாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தீ எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

