சிலாங்கூர் பள்ளிகளில் மன அழுத்த அபாயம்

2 mins read
4da0dac7-dbe2-4532-97b8-136716c026e5
சிலாங்கூரில் உள்ள 36,428 உயர்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 1,020 மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகவும் அதற்அகான ஆரம்பநிலை அறிகுறிகள் அவர்களிடம் தென்படுவதாகவும் சிலாங்கூர் மாநிலத்தின் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 7) தெரிவிக்கப்பட்டது. - படம்: மலேசிய ஊடகம்

ஷா ஆலம்: சிலாங்கூரில் உள்ள 36,428 உயர்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 1,020 மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகவும் அதற்கான ஆரம்பநிலை அறிகுறிகள் அவர்களிடம் தென்படுவதாகவும் சிலாங்கூர் மாநிலத்தின் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 7) தெரிவிக்கப்பட்டது.

நோயாளி உடல்நல வினாப்பட்டியல் மூலம் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலத்தின் பொதுச் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் ஜமாலியா ஜமாலுதீன் கூறினார். சோதனையிடப்பட்டோரில் 2.8 விழுக்காட்டினருக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் சமூக உளவியல் நடத்தை ஒட்டுமொத்த அடிப்படையில் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக 2024/2025 பள்ளிப் பருவத்துக்கான மனநலப் பரிசோதனைப் பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளதாக திருவாட்டி ஜமாலியா குறிப்பிட்டார்.

“மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் தொடக்கப்பள்ளி மாணவர்கள், குறிப்பாக தொடக்கநிலை ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மனநலம் மற்றும் உணர்வு ரீதியான மீள்திறனை மேம்படுத்துவது குறித்து முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இலக்கு,” என்றார் திருவாட்டி ஜமாலியா.

ஓய்வெடுத்தலுக்கான உத்திமுறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, தோள்பட்டை மற்றும் கழுத்தைப் பிடித்துவிடும் முறை உட்பட மனநலன் காக்க தேவையான பயிலரங்குகள் நடத்தப்படும் என்றார் அவர்.

சிறப்புப் பாடத் தொகுதிகளுடனான மனநலத் திட்டத்தை சிலாங்கூர் கல்வித்துறை நடத்துவதாகவும் அவர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். திட்டத்தின் பாடத் தொகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள், சமாளிப்புத் திறன்கள், உணர்வுகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள், மூச்சுப் பயிற்சி, கோபத்தைக் கட்டுப்படுத்துதல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முறை, ஆக்கபூர்வ சிந்தனை, செயலாக்கம் உடைய தொடர்புத்திறன் ஆகியவை அடங்கும் என்று திருவாட்டி ஜமாலியா கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்