கோலாலம்பூர்: உலகளாவிய எரிசக்தி விநியோகப் பற்றாக்குறையால் மலேசியாவில் பேரளவில் வேலை இழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாகவே உள்ளது என்று அந்நாட்டுப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர் நஸ்ருல்லா திங்கட்கிழமையன்று (ஜூன் 29) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நெருக்கடி உள்ளூர் நிறுவனங்களுக்குச் சில அழுத்தங்களை ஏற்படுத்தியபோதிலும், அண்மைய வேலைவாய்ப்புத் தரவுகள் பேரளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எதையும் காட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.9 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம், மே மாதத்தில் 3.0 விழுக்காடாகச் சற்றே உயர்ந்துள்ளது என்று கூறினார்.
இருப்பினும், ஊழியரணியின் பங்கேற்புத் திறன் நிலையாக உள்ளதால், வேலை இழப்புக்கான அபாயம் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தேவையான மாற்றங்கள் உடனுக்குடன் முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் ஆக்கப்பூர்வமான முறையில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகத் தடை, உள்நாட்டில் தளவாடங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, வேளாண்மை, உற்பத்தி, கட்டுமானம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் எரிபொருள் செலவு அதிகரிப்பு, விநியோகத் தாமதம் மற்றும் சரக்குக் கட்டண உயர்வு போன்ற சவால்களைத் தொழில்துறையினர் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களைக் கொண்ட நுண், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இந்த அழுத்தங்களால் விரைவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.
மக்களைப் பாதுகாத்தல், விநியோகம் மற்றும் விலையை நிலைப்படுத்துதல், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் நடுத்தர, நீண்டகாலப் பொருளியல் மீள்திறனை உருவாக்குதல் ஆகிய நான்கு முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அக்மல் நசீர் நஸ்ருல்லா மேலும் தெரிவித்தார்.

