பருவநிலை மாற்றத்தால் மில்லியன் கணக்கானோர் இடம்பெயரும் ஆபத்து: ஐநா எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் மில்லியன் கணக்கானோர் இடம்பெயரும் ஆபத்து: ஐநா எச்சரிக்கை

படம்: ஏஎஃப்பி

16 Oct 2026 - 9:31 pm

2 mins read

புதுடெல்லி: பருவநிலை மாற்றம் தெற்காசிய வட்டாரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதுடன், அவர்களை வீடுகளை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துகிறது என்று அனைத்துலக புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைமை இயக்குநர் ஏமி போப் எச்சரித்துள்ளார்.

புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம், அரசின் விரைவான நடவடிக்கைகள் மூலம் இப்பாதிப்பைக் குறைக்க முடியும் என்று கூறினார்.

கடல்மட்ட உயர்வு, வெள்ளப்பெருக்கு, வறட்சி காரணமாக வீடுகளும் விவசாய நிலங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பருவநிலை மாற்றத்தின் மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், வரும் 2050ஆம் ஆண்டிற்குள் தெற்காசியாவில் ஏறக்குறைய 4.05 கோடி மக்கள்வரை இடம்பெயரக் கூடும் என்று ஐநா அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் வெப்பத்தின் காரணமாக நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது.

பேரழிவுகள் ஏற்பட்ட பிறகு கோடிக்கணக்கான நிதியைச் செலவிடுவதைவிட, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை முன்கூட்டியே கண்டறிந்து தற்காப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்வது குறைந்த செலவிலான தீர்வாகும். இதற்கு செயற்கை நுண்ணறிவு, துல்லியமான தரவுகளைப் பயன்படுத்தி, வெள்ளம் அல்லது வறட்சியால் பாதிக்கப்படும் மக்களை முன்கூட்டியே கண்டறிந்து உதவ முடியும்.

புதிய விவசாய முறைகள், மாற்று வேலைவாய்ப்புப் பயிற்சிகள், பாதுகாப்பான இடமாற்றம் ஆகியவை அவசியமாகும். இதற்குப் பெருமளவிலான நிதி தேவைப்படுவதே முக்கிய சவாலாக உள்ளது.

முன்எச்சரிக்கை கட்டமைப்புகள், பேரிடர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதலீடுகள் நம்பிக்கை அளிப்பதாகக் கூறிய அவர், எந்தவொரு அரசாங்கமும் இந்தச் சவாலின் அளவைத் தனித்து எதிர்கொள்ள முடியாது என்றார்.

அதேவேளையில், அனைத்துலகப் புலம்பெயர்வு வெளிநாடுகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிறைவு செய்வதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை ஈட்டவும் உதவும்.

தெற்காசியாவில் ஏற்கெனவே உறுதியான புலம்பெயர்வுப் பாதைகள் உள்ளதால், இருக்கும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், அவர்களுக்குப் பாதுகாப்பான, சட்டபூர்வ வேலைவாய்ப்பு வழிகள் உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் உள்ளிட்ட மோசடிகள் மூலம் புலம்பெயர்வோர் கடத்தல்காரர்களாலும் இடைத்தரகர்களாலும் சுரண்டப்படும் ஆபத்து ஏற்படும்.

“புதிதாக உருவாகி வரும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தி, அந்த ஆற்றலை ஊழியர் இடமாற்றத்துடன் ஒருங்கிணைக்க முடிந்தால், அவர்கள் முன்னணியில் இருப்பார்கள்,” என்று ஏமி போப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்