ஜெனீவா: நிபா கிருமி பரவும் அபாயம் குறைவாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில், இந்தியாவிலும் பங்ளாதேஷிலும் நிபா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதனால், மூன்று பேர் பாதிக்கப்பட்டனர்.
நிபா கிருமி, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும். இதற்குத் தடுப்பூசி கிடையாது.
ஐக்கிய நாட்டுச் சுகாதாரத் தரவுகளின்படி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 40 விழுக்காடு முதல் 75 விழுக்காடாக உள்ளது.
“கடந்த சில வாரங்களாக நிபா கிருமிப்பரவல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருவரும் பங்ளாதேஷில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமிப்பரவல் பெரிய அளவில் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது,” என்றார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசுஸ்.
புதன்கிழமை (பிப்ரவரி 11), ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதை டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.
உலகச் சுகாதார நிறுவனம் நிபா கிருமிப் பரவலின் அபாயத்தை வட்டார அளவிலும் உலக அளவிலும் ஆராய்ந்தது. அதில் கிருமிப்பரவல் அபாயம் குறைவு என கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த மாதம் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு நிபா சம்பவங்கள் பதிவாகின. பங்ளாதேஷில் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டு நாடுகளிலும் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களுக்கு இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார் டாக்டர் டெட்ரோஸ்.
நிபா கிருமிப்பரவல் முதல்முறையாக 1998ஆம் ஆண்டு மலேசியாவில் அடையாளம் காணப்பட்டது. பன்றி வளர்க்கும் விவசாயிகள் இடையே அது பரவியது.
இந்தியாவில், 2001ஆம் ஆண்டு முதல்முறையாக நிபா கிருமி அடையாளம் காணப்பட்டது. அது மேற்கு வங்கத்தில் பதிவானது.
2018ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நிபா கிருமி பரவியது. அதில் 17 பேர் மாண்டனர். 2023ஆம் ஆண்டு நிபா கிருமியால் அந்த மாநிலத்தில் இருவர் மாண்டனர்.
நிபா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி, மூச்சுத் திணறல் போன்றவை இருக்கும்.

