‘ஃபொரெவர் கெமிக்கல்ஸ்’ நச்சை அழிக்கும் ஆற்று நுண்ணுயிரிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

‘ஃபொரெவர் கெமிக்கல்ஸ்’ நச்சை அழிக்கும் ஆற்று நுண்ணுயிரிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

2 mins read
b88e6f23-f109-494f-8fd4-1df7278f2c18
‘ஃபொரெவர் கெமிக்கல்ஸ் என அழைக்கப்படும் அபாயகரமான வேதிப்பொருள்களை, மாசடைந்த ஆற்றுப் படுகைகளில் உள்ள சில நுண்ணுயிரிகளால் அழிக்க முடியும் என்று ஜப்பானைச் சேர்ந்த கோபே பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு கண்டறிந்துள்ளது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

தோக்கியோ: நச்சுத்தன்மை வாய்ந்த ‘ஃபொரெவர் கெமிக்கல்ஸ் என அழைக்கப்படும் அபாயகரமான வேதிப்பொருள்களை, மாசடைந்த ஆற்றுப் படுகைகளில் உள்ள சில நுண்ணுயிரிகளால் அழிக்க முடியும் என்று ஜப்பானைச் சேர்ந்த கோபே பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு கண்டறிந்துள்ளது.

பிஎஃப்ஏஎஸ் எனப்படும் பாலிப்ளூரோஆல்கைல் பொருள்கள், தங்களின் வலுவான கார்பன்-ப்ளோரின் பிணைப்பு காரணமாக எளிதில் சிதைவடையாத இயல்பு கொண்டவை. இதனால், உலகளவில் நீர், மண் மற்றும் வனவிலங்குகளில் இவை ஊடுருவி, பெரும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன.

நீர் மற்றும் எண்ணெய்யை எதிர்க்கும் திறன் மற்றும் அதிக வேதியியல் நிலைத்தன்மை கொண்ட பிஎஃப்ஏஎஸ் பொருள்கள், ராணுவப் பகுதிகள் மற்றும் தொழிற்பேட்டைகளுக்கு அருகில் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்றன.

மேலும், துணிகள் முதல் தீயணைப்பு நுரைகள் வரை பல்வேறு தயாரிப்புகளிலும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜப்பானில் பிஎஃப்ஏஎஸ் வகையைச் சேர்ந்த பிஎஃப்ஓஎஸ் மற்றும் பிஎஃப்ஓஏ ஆகிய நச்சுப் பொருள்களைத் தயாரிக்கவும் இறக்குமதி செய்யவும் சில விதிவிலக்குகளுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“இயற்கைச் சூழலில் இருந்து சேகரிக்கப்படும் நுண்ணுயிரிகளை வளர்த்துப் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த செலவில் நச்சு நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என்று கோபே பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஹிடேயுகி இனுய் தெரிவித்தார்.

ஒசாக்கா மாநிலத்தில் உள்ள சமொண்டோ ஆற்றின் வண்டல் மண் மாதிரிகளைச் சேகரித்த ஆராய்ச்சிக்குழு, பிஎஃப்ஓஎஸ் மற்றும் பிஎஃப்ஓஏ செறிவைக் குறைக்கும் திறன் கொண்ட நுண்ணுயிரிப் பிரிவுகளைப் பிரித்தெடுத்து அடையாளம் கண்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் ‘ஜர்னல் ஆஃப் வாட்டர் புராசஸ் இன்ஜினியரிங்’ இதழின் ஆகஸ்ட் மாத இணையப்பதிப்பில் வெளியாகியுள்ளன. தொழில்துறைக் கழிவு மேலாண்மை நிலப்பரப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரிலும் இந்த நுண்ணுயிரி வகை பிஎஃப்ஓஎஸ் செறிவை வெகுவாகக் குறைப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்ஆறுநச்சு