இல்லாத நிலத்தை விற்று 1.5மி. ரிங்கிட் மோசடி: தம்பதி கைது

இல்லாத நிலத்தை விற்று 1.5மி. ரிங்கிட் மோசடி: தம்பதி கைது

1 mins read
2023ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அந்தத் தம்பதிகள் 195 மோசடிப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர்.
bc100595-8219-4801-a5b7-fb1a05728880
வியாழக்கிழமை (மார்ச் 5) தொடங்கி, நடிகையும் அவரது கணவரும் மூன்று நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். - படம்: பிர்டவுஸ் டத்தீஃப் (மலாய் மெயில்)

சிரம்பான்: நில விற்பனை மோசடி குற்றத்துக்கு ஒரு நடிகையும் அவரது கணவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இல்லாத அந்த நிலத்தை விற்றதாக நடந்த மோசடியில் 1.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட (S$113.000+) தொகை இழக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை மலேசியக் காவல்துறை வியாழக்கிழமை (மார்ச் 5) தெரிவித்துள்ளனர். நீதிபதி நுருல் அசுவின் முகம்மது தல்ஹா முன்னிலையில் அந்த 35 வயது நடிகையும் அவரது 41 வயது கணவர் மீதும் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.

காவல்துறையினர் காலை 9.18 மணியளவில் பழுப்பு நிறச் சீருடை அணிந்திருந்த அந்த இருவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.

புதன்கிழமை (மார்ச் 4) அந்தத் தம்பதிகள் சிலாங்கூரில் பாத்து 11, ஹுலு லங்காட் பகுதியில் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் காவல்துறை துணை ஆணையர் அஸஹார் அப்துல் ரஹிம் கூறினார்.

அரசாங்கத்தின்கீழ் உள்ள புறம்போக்கு நிலம் வாங்குவதில் மோசடி நிகழ்ந்துள்ளதாக 56 வயதான முன்னாள் வர்த்தகர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துணை ஆணையர் குறிப்பிட்டார்.

அந்த நபர் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் அந்தத் தம்பதிகளுடன் 195 பரிவர்த்தனைகளைச் செய்து 1.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

தம்பதிகள்மீது குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை நடைபெற அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக திரு அஸஹார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்