கோலாலம்பூர்: சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கடுமையாக்கும் நோக்கில் சிலாங்கூர் நீர் நிர்வாக ஆணையச் (லுவாஸ்) சட்டத்தை முடுக்கிவிடத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், குற்றவாளிகளுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் (S$303,492) வரையிலான அபராதமும் மூவாண்டுகள் வரையிலான கட்டாய சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். சுற்றுச்சூழல் அசுத்தப்படுத்தப்படும் சம்பவங்களை மேலும் நன்கு கையாள விசாரணை மேற்கொள்ளவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் மாநில சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதும் இந்நடவடிக்கையில் அடங்கும் என்று சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதீன் ஷாரி கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
துர்நாற்றம் வீசும் வகையில் நீர் மாசுபடுத்தப்படுவதைத் திரு அமிருதீன் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். அவ்வாறு மாசடைந்த, துர்நாற்றத்துடன் கூடிய நீர், சிலாங்கூர் அணைக்கட்டை வந்தடைய 18லிருந்து 24 மணிநேரம் ஆகும்; அதனால், அச்செயலில் ஈடுபட்டோரை அடையாளம் காண்பது சிரமமாகிறது. அதன் காரணமாக அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருப்பதாக திரு அமிருதீன் சொன்னார்.
“பராங் கலியில் சம்பவம் நிகழ்ந்தால் அது, இங்கு வந்தடைய 15லிருந்து 16 மணிநேரம் ஆகலாம். அதற்குள் ஆதாரங்கள் அழிந்துவிடும். இதுதான் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று,” என்று அவர் விவரித்தார்.
லுவாஸ் சட்டம், தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்தின்கீழ் வருகிறது. அதனால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அதிகமானோர் மீது அச்சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதில்லை.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், சந்தேக நபர்கள்மீது சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கலாம்.
அதோடு, வறட்சி, அளவுக்கதிகமான மழை ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை சிலாங்கூர் மேலும் நன்கு கையாள விரிவான நீர் பெருந்திட்டம் (comprehensive water master plan) ஒன்று வரையப்பட்டுவருவதாகவும் திரு அமிருதீன் அறிவித்தார். அத்திட்டம் ஓராண்டுக்குள் வரையப்படும் என்று அவர் தெரிவித்தார்.

