செபாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சுங்கத்துறை, கடந்த ஜனவரியிலும் பிப்ரவரியிலும் நடந்த தனிப்பட்ட சம்பவங்களில் 3.26 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருளையும் வெளிநாட்டு நாணயங்களையும் கடத்துவதற்கான முயற்சிகளை முறியடித்துள்ளது.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி நடந்த முதல் சம்பவத்தில், டான்சானியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டார். அவர் தமது உடலில் போதைப்பொருள்களை மறைத்துவைத்து அவற்றைக் கடத்த முயற்சிசெய்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.
அந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கொக்கைன் என்று நம்பப்படும் வெள்ளைத் தூள் கொண்ட 101 மாத்திரைகள் அவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற பிப்ரவரி 6ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தில், வெளிநாட்டு நாணயங்களைத் தெரிவிக்காமலேயே மலேசியாவுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பங்ளாதேஷ் பயணி ஒருவர் தடுத்துவைக்கப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு ஏறக்குறைய 2.41 மில்லியன் ரிங்கிட் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த மூன்றாவது சம்பவத்தில், இந்தோனீசியப் பயணி ஒருவர் தெரிவிக்காமல் ரிங்கிட் நாணயத்தை மலேசியாவுக்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டார்.
கூடுதல் நடவடிக்கை எடுப்பதற்காக அந்தச் சம்பவம் கோலாலம்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

