மலாக்கா: வெள்ளப் பெருக்கைத் தணிக்கும் நோக்கம் கொண்ட 1.46 பில்லியன் ரிங்கிட் ($454 மில்லியன்) பெறுமானமுள்ள எட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
மலாக்காவில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போரின் பாதுகாப்பை மேம்படுத்துவது நோக்கம்.
மாநிலத்தில் வெள்ளப் பெருக்கின் அபாயத்தையும் தாக்கத்தையும் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசாங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டங்கள் அமைவதாக மலாக்கா நீர்ப்பாசன, வடிகால் துறை இயக்குநர் முகமது அட்னான் அகமது ஃபௌசி தெரிவித்தார்.
அலோர் காஜா வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் முதற்கட்டம், பண்டார் ஜாசின் திட்டம், பண்டார் மெர்லிமாவ் திட்டம், சுங்கை புதாத் திட்டம், சுங்கை டுயோங் திட்டம் முதலியவை இவற்றுள் சில என்றார் அவர். அத்துடன் குரூபோங்-டுரியான் துங்கல் வெள்ளத் தணிப்புக் குளத்தை வெள்ளத் தணிப்புக்கும் மாநிலக் குடிநீர் விநியோகத் தேவைகளுக்கும் பயன்படும் இரட்டை நோக்கம் கொண்ட வசதியாக மேம்படுத்துவதும் இத்திட்டங்களில் அடங்கும் என்று திரு.முகமது அட்னான் குறிப்பிட்டார்.
“தற்போதுள்ள ஆறு திட்டங்களில், ஐந்து அடுத்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; எஞ்சியுள்ள திட்டம் 2030ஆம் ஆண்டில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
“நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முந்திய நிலையில் இருக்கும் மலாக்கா ஆற்று வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் முதற்கட்டமும் அலோர் காஜாவில் உள்ள சுங்கை பாரு திட்டமும் இப்போது வடிவமைப்பு நிலையில் உள்ளன,” என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதுவரை இந்த வெள்ளத் தணிப்புத் திட்டங்களில் எதுவும் முழுமையாக நிறைவடையவில்லை. ஆயினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் குறைந்திருப்பது அண்மைத் தரவுகளில் தெரியவந்தன. 2021ல் 157ஆக இருந்த அது, கடந்த ஆண்டில் 106க்குக் குறைந்ததாகத் திரு.முகமது அட்னான் கூறினார்.
“இந்தத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்ததும், மலாக்காவில் 50,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

