இந்தியா, இந்தோனீசியாவிற்கு சட்டவிரோதமாக 3.6 மில்லியன் ரிங்கிட் அனுப்பும் திட்டம் முறியடிப்பு: மலேசியா

2 mins read
மளிகைக் கடைகள், உணவகங்கள் என்ற போர்வையில் மோசடிக் கும்பல் இயங்குவதாகத் தகவல்
13c67cf4-27e3-412c-91c3-ead13259f9f0
கிள்ளான், கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸ் ஆகிய பகுதிகளில் மளிகைக் கடைகள், உணவகங்கள் என்ற போர்வையில் மோசடிக் கும்பல் இயங்குவதாக அதிகாரிகள் நம்புகின்றனர். - படம்: மலாய் மெயில்

புத்ராஜெயா: மலேசியக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக அனுப்பப்படவிருந்த 3.6 மில்லியன் ரிங்கிட் (S$1.1 மில்லியன்) தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் வெளிநாட்டினர் பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறப்பு நடவடிக்கை, கிள்ளானிலும் கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியிலும் செயல்படும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றக் கும்பலை குறிவைத்து கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 6) மேற்கொள்ளப்பட்டதாக மலேசியக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் கூறினார்.

மலேசியாவின் மத்திய வங்கி (BNM), மலேசிய இணையப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து குடிநுழைவுத் துறை அந்தச் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதில், 1,400 யூரோ, 10,000 சீன யுவான் நாணயம் ஆகியவற்றுடன் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் தங்க நகைகளும் பிடிபட்டன.

முதற்கட்டச் சோதனையில், இந்திய நாட்டவர் மூவர் தங்கள் வேலை அனுமதி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் இருவர் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகும் மலேசியாவில் தங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது.

அத்துடன், உரிய பயண ஆவணங்களோ மலேசியாவில் தங்குவதற்கான அனுமதியோ இல்லாத இந்திய நாட்டவர் மூவரும் இந்தோனீசியப் பெண்கள் இருவரும் பிடிபட்டனர்.

பிடிபட்ட அனைவரும் 21 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குடிநுழைவுத் துறை அவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கிறது என்றும் திரு ஸக்காரியா ஷாபான் கூறினார்.

பண மோசடிக் கும்பல், உரிமமின்றி பணப் பரிமாற்றச் சேவையை வழங்கிவந்ததாகவும் முக்கியமாக இந்தோனீசிய, இந்திய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சேவை வழங்கியதாகவும் அவர் சொன்னார்.

மளிகைக் கடைகள், உணவகங்கள் என்ற போர்வையில் அவர்கள் செயல்பட்டனர் என்றார் திரு ஸக்காரியா ஷாபான்.

ஓராண்டாகச் செயல்பட்ட அந்த மோசடிக் கும்பல் அன்றாடம் 15,000 ரிங்கிட் முதல் 60,000 ரிங்கிட் வரையிலான தொகையைப் பரிமாற்றம் செய்தது தெரியவந்துள்ளது. பண்டிகைக் காலங்களில் அதிகபட்சம் 110,000 ரிங்கிட் வரையிலான தொகையை அது கையாண்டது. சட்டவிரோத நிதியைத் தங்க நகைகளாக மாற்றி அவர்கள் மலேசியாவிற்கு வெளியே கொண்டுசென்றதாக அதிகாரிகள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்