பட்டர்வொர்த்: பிப்ரவரி மாத நிலவரப்படி மலேசிய இந்தியத் தொழில்முனைவர்களுக்கு மலேசிய அரசாங்கம் இவ்வாண்டு 300 மில்லியன் ரிங்கிட் (S$90.6 மில்லியன்) நிதி ஒதுக்கியிருப்பதாக அந்நாட்டின் தொழில்முனைவர் மேம்பாட்டு, கூட்டுறவுகள் துணை அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவுக்கு 100 மில்லியன் ரிங்கிட், மலேசிய இந்தியச் சமூகத் தொழில்முனைவர் மேம்பாட்டுத் திட்டத்துக்காக 100 மில்லியன் ரிங்கிட், பேங்க் ராக்யாட்டின் இந்தியத் தொழில்முனைவர் நிதித் திட்டத்துக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் திரு ரமணன் கூறினார்.
“நாட்டின் இந்திய சமூகத்தினரின் சமூகப் பொருளியல் நிலையை உயர்த்த மலேசிய அரசாங்கம் பல திட்டங்களைப் பரிசீலித்து வருகிறது. இந்தியத் தொழில்முனைவர்களுக்காக இரண்டே மாதங்களில் 300 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
“தொழில்முனைவர் மேம்பாட்டு, கூட்டுறவுகள் அமைச்சின்கீழ் செயல்படும் பல்வேறு அமைப்புகளுடன் இதுகுறித்து பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளேன்,” என்று திரு ரமணன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) கூறினார்.
இந்தத் தகவலை பெர்னாமா வெளியிட்டது.
பினாங்கு மாநிலத்தின் இந்தியத் தொழில்முனைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்தியத் தொழில்முனைவர்களுக்காக மலேசிய அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி குறித்து திரு ரமணன் அறிக்கை வெளியிட்டார்.
இந்தியத் தொழில்முனைவர்கள் மலேசியாவின் வளர்ச்சிக்குப் பேரளவில் பங்காற்றியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதை இந்த நிதி ஒதுக்கீடு பிரதிபலிப்பதாகத் திரு ரமணன் கூறினார்.
இந்தியத் தொழில்முனைவர்கள் தங்கள் வர்த்தகங்களை மேலும் வலுப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
மலேசிய அரசாங்கம் வழங்கும் இந்த நிதி பற்றி சக இந்தியத் தொழில்முனைவர்களிடம் தெரிவிக்கும் தூதர்களாக அவர்கள் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
அவ்வாறு செய்தால் இந்த அருமையான வாய்ப்பு மூலம் கூடுதல் இந்தியத் தொழில்முனைவர்கள் பலனடைவர் என்று திரு ரமணன் தெரிவித்தார்.