ஏடிஎம் இயந்திரங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு

ஏடிஎம் இயந்திரங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு

24 Feb 2023 - 9:08 am

1 mins read

ஷா ஆலம்: இரண்டு தானியக்க வங்கி இயந்திரங்களை (ஏடிஎம்) வெடிவைத்துத் தகர்த்து, பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது.

சிலாங்கூரின் ஷா ஆலமில் இருக்கும் செட்டியா ஆலம் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியது.

அந்த ஏடிஎம் திருட்டுத் தொடர்பில் நேற்று (23-02-2023) காலை 6.48 மணியளவில் தகவல் கிடைத்ததாக ஷா ஆலம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் இக்பால் இப்ராகிம் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு இரு ஏடிஎம் இயந்திரங்கள் தகர்க்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

ஆனாலும், கொள்ளைக் கும்பலால் ஓர் இயந்திரத்தை மட்டுமே உடைக்க முடிந்ததாக பெர்னாமா செய்தி கூறுகிறது.

அவர்கள் 349,000 ரிங்கிட் (S$105,600 அல்லது ரூ.65,09,000) பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் மூவர் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கண்காணிப்புப் படக்கருவிகள்மீது அவர்கள் கறுப்புச் சாயத்தைத் தெளித்ததால் காணொளிப் படங்கள் தெளிவாக இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.

தடயவியல் துறை, வெடிகுண்டுச் செயலிழப்புப் பிரிவு, எறிகணையியல் புலனாய்வுப் பிரிவு ஆகியவை காவல்துறைக்கு விசாரணையில் உதவி வருகின்றன.