இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் 4,000 ரிங்கிட் மதிப்புள்ள கடலுணவுக் கடத்தலை மலேசிய அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
சுல்தான் அபு பக்கார் குடிநுழைவு வளாகத்தைக் கடந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்றிலிருந்து அந்த உணவுப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
மலேசியாவின் தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனைச் சேவைத் துறை (Maqis) அதிகாரிகள் அந்த லாரியை வியாழக்கிழமை (நவம்பர் 21) காலை 10 மணியளவில் சோதனையிட்டனர்.
லாரிக்குள், உரிமம் வழங்கப்பட்ட பொருள்களுடன் கலந்து 112 கிலோ கடலுணவு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பதப்படுத்தப்பட்ட இறால் மற்றும் மீன் தயாரிப்புகள் அவை. அவற்றின் சந்தை மதிப்பு 4,333 ரிங்கிட். ஏற்றுமதிக்கான அனுமதி பெறாததால் அந்த உணவுப்பொருள்கள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், முறையான அறிவிப்பு இன்றி கடலுணவுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்ததாக துறை அதிகாரியான எடி புத்ரா முகம்மது யூசோஃப் ஞாயிறன்று (நவம்பர் 24) கூறினார்.
தமது துறையின் அனுமதி பெறாமல் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றமாகும் என்றார் அவர்.
நாட்டின் வேளாண் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் மலேசியாவின் சோதனைச் சாவடிகளில் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்வதில் தமது துறை உறுதியுடன் இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.