கோலாலம்பூர்: மலேசியாவிலுள்ள ஆலயம் ஒன்றின் முன்னாள் தலைவர் நிதிக் கையாடல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏறத்தாழ 50,000 ரிங்கிட் அளவுக்கு அவர் முறைகேடு செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தரப்புத் தகவல் கூறியது.
அந்தக் கைது நடவடிக்கை வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றதாகவும் கைதான ஆடவர் 70களில் உள்ளவர் என்றும் ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
தற்போது பிடிபட்டவருடன் சேர்ந்து மோசடி செய்த மற்றொரு நபர் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இருவரும் சேர்ந்து ஆலயப் பழுதுபார்ப்புப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்ததாக அறிக்கை தெரிவித்தது.
நிதிக் கையாடல் 2021 நவம்பரில் நிகழ்ந்ததாகவும் பழுதுபார்ப்புப் பணி எதுவும் நடைபெறாத நிலையில் அவை நடைபெற்றதாகக் கணக்கு காட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
பெரும்பாலும் இந்து பக்தர்களின் நன்கொடையில் இயங்கி அந்த ஆலயம் 1950களில் கட்டப்பட்டது என்றும், அரசாங்க நிலத்தில் அனுமதி இன்றிக் கட்டப்பட்டதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆலயத்தின் பதிவு 2024 அக்டோபரில் ரத்து செய்யப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறினர்.
முறையாகப் பதிவு செய்யப்படாததால் ஆலயத்தின் நிதி நிர்வாகம் மற்றும் செலவினங்களை அதிகாரிகள் கண்காணிக்கவில்லை. நிதியைத் தவறாகப் பயன்படுத்த அது வசதியாகிவிட்டது என்றனர் அவர்கள்.
கைது நடவடிக்கையை உறுதிசெய்த ஆணையத்தின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முஹம்மது அஸ்வான் ரம்லி, காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
விசாரண நடைபெறுவதால் கோவில் மற்றும் கைதானவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

