பெட்டாலிங் ஜெயா: இவ்வாண்டு ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து ஜூலை 17ஆம் தேதிவரை மலேசிய இந்தியப் பெண்கள் 1,299 பேருக்கு ‘அமானா இக்தியார் மலேசியா (AIM)’ மற்றும் புதிய இயல்புநிலை (PENN) திட்டங்களின்கீழ் 8.8 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பேராக்கில் புதிய இயல்புநிலைத் திட்டத்தின்கீழ் 3.3 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறவுத் துணை அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.
அதற்கு அடுத்தபடியாக, சிலாங்கூர், கோலாலம்பூரில் தலா 1.8 மில்லியன் ரிங்கிட்டும், நெகிரி செம்பிலான், மலாக்காவில் தலா 1.3 மில்லியன் ரிங்கிட்டும் அத்திட்டத்தின்கீழ் கடனாக வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ‘எய்ம்’ திட்டத்தின்கீழ் ‘சகாபத்’ எனும் குறுதொழில் முனைவர் நிதித் திட்டம் வழியாக உதவிபெறவும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளதாகத் திரு ரமணன் குறிப்பிட்டார்.
“இது மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. சகாபத் திட்டத்திற்கு பேராக்கிலிருந்து 396 விண்ணப்பங்களும், சிலாங்கூர், கோலாலம்பூரிலிருந்து தலா 293 விண்ணப்பங்களும் வந்துள்ளன,” என்று அவர் சொன்னார்.
“அதிகமான இந்தியப் பெண்கள், குறிப்பாக வேலையின்றி இருக்கும் இளையர்கள், பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தொழில்முனைப்பில் இறங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தொழில்முனைவராவதற்கான முயற்சியைத் தொடங்குங்கள்,” என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 19) ‘PENN’ திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திரு ரமணன் கேட்டுக்கொண்டார்.