பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சீனப் புத்தாண்டு நாளன்று (பிப்ரவரி 17) காலையில் நேர்ந்த சாலை விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் புக்கிட் பெருந்துங்கிற்கு அருகில் உள்ள விரைவுச்சாலையில் விபத்து நேர்ந்தது.
சம்பவம் குறித்து காலை 7.33 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் எட்டு நிமிடங்களில் அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
இரண்டு கார்களும் சுண்ணாம்புத் தூள் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றும் விபத்தில் சிக்கியதாக அவர் சொன்னார்.
“அந்த லாரியை ஓட்டிய 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் தலையில் பலத்த காயமடைந்தார். கார் ஓட்டுநர்களில் ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன,” என்று திரு அகமது விளக்கினார்.
“அதே காரில் சென்ற 50 வயது மதிக்கத்தக்க மாது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டாவது காரை ஓட்டிக்கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் காயமின்றி தப்பினார்,” என்று திரு அகமது தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு 14 தீயணைப்பாளர்கள் அனுப்பப்பட்டதாகவும் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

