மலேசியா: பெருநாள் காலத்தில் 15,000 சாலை விபத்துகள்

2 mins read
7d22e78e-f8f6-4c55-81b5-c570d66b1d37
மலேசியாவில் இவ்வாண்டு மார்ச் 29 தேதியில்தான் அதிகமாக 2,040 வாகன விபத்துகள் நிகழ்ந்தன. மார்ச் 30ஆம் தேதியில் அதிகமானோர் மாண்டனர் என்று கூறப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

பெட்டாலிங் ஜெயா: இவ்வாண்டு ஏப்ரல் மாத ஹரி ராயா பெருநாள் காலத்தில் மலேசியாவில் சாலைப் போக்குவரத்து விபத்துகள் 15,000ஐ தாண்டி 15,246ஐ தொட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 123 பேர் மாண்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து ஆய்வு, அமலாக்கத் துறை கூறியுள்ளது.

இது சென்ற 2024ஆம் ஆண்டு பெருநாள் கால சாலைப் போக்குவரத்து விபத்து எண்ணிக்கையான 14,674ஐ காட்டிலும் இவ்வாண்டு விபத்து எண்ணிக்கை 3.8 விழுக்காடு அதிகம் என்று கூறப்படுகிறது.

எனினும், மாண்டோர் எண்ணிக்கையைப் பார்க்கும்போது இவ்வாண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதிக்கும் எப்ரல் 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு எண்ணிக்கையான 174ல் இருந்து இவ்வாண்டு 123ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இவ்வாண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டின் பெருநாள் கால இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட 29.3 விழுக்காடு குறைவு என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாண்டு மார்ச் 29ஆம் தேதியில்தான் அதிகமாக 2,040 வாகன விபத்துகள் நிகழ்ந்தன. மார்ச் 30ஆம் தேதியில் அதிகமாக 20பேர் மாண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஒப்புநோக்க, சென்ற 2024ஆம் ஆண்டில் மிக அதிகமான சாலை விபத்துகள் ஏப்ரல் 6ஆம் தேதி நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அன்று 2,156 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. எனினும், அதிகமாக 35 பேர் ஏப்ரல் 10ஆம் தேதி இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹரி ராயா நோன்புப் பெருநாள் இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தப் பெருநாள் சென்ற ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

இதேபோன்ற போக்கையே புள்ளிவிவரக் கணக்கு காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்ற 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் 8லிருந்து ஏப்ரல் 13 வரையிலான காலகட்டத்தில் 8,909 விபத்துகள் நிகழ்ந்ததாகவும் இவற்றில் 111 மரணங்கள் நிகழ்ந்ததாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்