கோலாலம்பூர் பேருந்து முனையத்தில் ரோபோ பாதுகாவல் அதிகாரி

கோலாலம்பூர் பேருந்து முனையத்தில் ரோபோ பாதுகாவல் அதிகாரி

2 mins read
94b6a83a-f25e-4485-95a6-1cfd48fb261e
கோலாலம்பூரில் உள்ள டிபிஎஸ் பேருந்து முனையத்தில் காணப்படும் ரோபோ பாதுகாவல் அதிகாரி. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: முக அடையாள முறை, சுற்றுப்பகுதி முழுவதையும் கண்காணிக்கும் ‘பார்வை’, கவனிக்கப்படாத பெட்டிகள் மற்றும் புகைத்தல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை அடையாளம் காணும் ஆற்றல் ஆகிய திறன்களைக் கொண்ட ரோபோக்கள்.

அத்தகைய அதிநவீன ரோபோ இப்போது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டிபிஎஸ் எனப்படும் பேருந்து முனையத்தில் சோதனை செய்யப்பட்டுவருகிறது. இம்மாதம் 19ஆம் தேதி இந்தப் பாதுகாவல் ரோபோ சோதனைக்கு விடப்பட்டது.

டிபிஎஸ் முனையத்தில் சோதனை

மலேசியாவில் மாநிலங்களுக்கிடையே இயங்கும் பேருந்துச் சேவைகளை வழங்கும் ஆக முக்கியமான முனையங்களில் ஒன்றான டிபிஎசில் மனிதப் பாதுகாவல் அதிகாரிகளுடன் சேர்ந்து அது பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மனிதப் பாதுகாவல் அதிகாரிகள் மேற்கொள்ளும் பணிகளுடன் கூடுதல் பணிகளை ரோபோ அதிகாரி மேற்கொள்வதாக டிபிஎசில் பாதுகாவல் நடவடிக்கைளுக்குப் பொறுப்பு வகிக்கும் நிறுவனமான சோல்செக் செண்டரியான் பர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் எஸ். சண்முகமூர்த்தி தெரிவித்தார். அறிவார்ந்த காணொளி ஆய்வு (intelligent video analytics) முறைகளைக் கொண்டு பாதுகாப்பு விதிமீறல்கள், அபாயங்கள் ஆகியவற்றை ரோபோ அடையாளம் காண உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் எண்ணிக்கையில் களமிறங்கலாம்

பண்டார் டாசிக் சிலாத்தானில் உள்ள டிபிஎசில் ரோபோ சோதனை செய்யப்படுவதாகக் கூறிய அவர் வருக்ஙாலத்தில் இதுபோன்ற ரோபோக்கள் கூடுதல் எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்தப்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

சந்தேகத்துக்குரிய பொருள்கள், பாதைகளில் இருக்கும் இடையூறுகள் அதிகக் கூட்டம் உள்ளிட்டவற்றை அடையாளம் காணும் ஆற்றல், முக அடையாள முறை போன்ற திறன்களை இந்த ரோபோ கொண்டிருப்பதாக திரு சண்முகமூர்த்தி கூறினார். உதவி தேவைப்படக்கூடிய அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒருவர் தரையில் படுத்திருந்தாலும் ரோபோவால் அடையாளம் காண முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கூடுதல் ‘பொறுப்பு’

கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தாண்டி இந்த ரோபோ, நடமாடும் அவசர நடவடிக்கை இயந்திரமாகவும் செயல்படுகிறது என்றார் திரு சண்முகமூர்த்தி. அந்த வகையில், சிறிய தீயணைப்பான், முதலுதவிக் கருவிகள் போன்றவற்றை ரோபோ வைத்திருப்பதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாசெயற்கை நுண்ணறிவுபாதுகாப்புமுனையம்