ரோட்ரிகோ டுட்டார்ட்டே விசாரணைக்குத் தகுதியாக உள்ளார்: அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம்

ரோட்ரிகோ டுட்டார்ட்டே விசாரணைக்குத் தகுதியாக உள்ளார்: அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம்

படம்: ஏஎஃப்பி

09 Oct 2026 - 10:37 am

1 mins read

த ஹேக்: போதைப்பொருள் வர்த்தக ஒழிப்பு நடவடிக்கையின்போது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் விசாரணைக்கு, பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே தகுதியான நிலையில் உள்ளதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்துள்ளது.

81 வயதாகும் டுட்டார்ட்டேயின் வழக்கு விசாரணை நவம்பர் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அவர் வழக்கு நடவடிக்கைகளில் தமது நியாயமான விசாரணை உரிமைகளைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியும் என்று கருதுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

தன்னிச்சையான வல்லுநர் குழுவின் கண்டறிதல்கள், ஆர்வமுள்ள இதர தரப்புகளின் சமர்ப்பிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

டுட்டார்ட்டே குற்றச்சாட்டுகளையும் விசாரணையின் நோக்கத்தையும் விளைவுகளையும் புரிந்துகொள்ளவும், சான்றுகளைப் புரிந்துகொண்டு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கித் தற்காப்பு வாதங்களை முன்வைக்கவும் தேவைப்படும் திறனைக் கொண்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

செப்டம்பர் மாத மத்தியில் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையான டுட்டார்ட்டே, ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற போதைப்பொருள் ஒழிப்புப் போர் தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 2013 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் மேயராகவும் அதிபராகவும் இருந்தபோது, கிட்டத்தட்ட 76 கொலைச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2016 முதல் 2022 வரை பிலிப்பீன்சின் அதிபராக இருந்த டுட்டார்ட்டே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளும் ஆசியாவின் முதல் முன்னாள் அரசாங்கத் தலைவராவார்.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்உலக நீதிமன்றம்போதைப்பொருள்ஒழிப்புகுற்றச்சாட்டுவிசாரணை