கோத்தா திங்கி: இரண்டு வாரங்களுக்கு முன்பு தமது கர்ப்பிணி மனைவி மற்றும் கருவில் இருந்த குழந்தையைக் கொன்றதாக 35 வயது ரோஹிங்கியா அகதி ஒருவர் மீது புதன்கிழமையன்று (பிப்ரவரி 25) மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இருக்கும் கோத்தா திங்கி நீதிமன்றத்தில் இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிகையலங்கார நிபுணராகப் பணிபுரிந்த ரஷிதுல்லா மோங் ஃபூமியா, கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலையில் கம்போங் மக்காமில் உள்ள ஜாலான் ஹாஜி முஸ்தஃபாவில் உள்ள ஒரு வீட்டில் 34 வயது ஃபஸானா எஸ்காரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக அவர் தண்டனைச் சட்டப் பிரிவு 302ன்கீழ் விசாரிக்கப்படுகிறார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
தனது மனைவியின் தலையின் இடது பக்கத்தில் அம்மிக்கல்லால் தாக்கி, அவரது இறப்பிற்கும் அவரது வயிற்றில் இருந்த கருவின் இறப்பிற்கும் காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்ட ரஷிதுல்லா, தனக்கு விதிக்கப்படக்கூடிய தண்டனையைப் புரிந்துகொண்டதாகக் கூறி அழுதார். அவர் மன்னிப்புக் கோரியதோடு, தனது தண்டனையைக் குறைக்குமாறும் கேட்டுக்கொண்டார். இருப்பினும், மொழிபெயர்ப்பாளர் மற்றும் நீதிபதி பலமுறை கேட்டும் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
வழக்கு வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

