ஐநா நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் ரோஹிங்கியா அகதிகள்; தாயகம் திரும்ப விருப்பம்

ஐநா நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் ரோஹிங்கியா அகதிகள்; தாயகம் திரும்ப விருப்பம்

படம்: ஏஎஃப்பி

21 Nov 2026 - 4:32 pm

2 mins read

காக்ஸ் பஸார்: மியன்மாரில் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது, ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மார் இனப்படுகொலை புரிந்ததாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நெதர்லாந்திலிருந்து வெளியான இந்தச் செய்தியை, பங்களாதேஷின் காக்ஸ் பஸாரிலுள்ள அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பெரிய திரையில் பார்த்தனர்.

பங்களாதேஷ் எல்லையோரத்திலுள்ள தங்களது சொந்த வீடுகளுக்கு என்றாவது ஒருநாள் பாதுகாப்பாகத் திரும்ப முடியும் என்ற நம்பிக்கைக் கீற்றை நவம்பர் 19ஆம் தேதி வெளியான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தங்களுக்கு அளித்துள்ளதாகவும் இதனை ஒரு சிறிய வெற்றியாகக் கருதுவதாகவும் பலர் தெரிவித்தனர். தாயகம் திரும்பிய பின்னரே தாங்கள் முழு மனநிறைவு அடைவோம் என்றும் சிலர் கூறினர்.

நாட்டின் ரோஹிங்கியா இனத்தவருக்கு எதிரான குற்றத்துக்கு மியன்மாரே பொறுப்பு எனக் கண்டறிந்துள்ள இந்தத் தீர்ப்பு, ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ஒரு நாடு இனப்படுகொலை புரிந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளிப்பது இதுவே முதல் முறையாகும்.

ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் இனப்படுகொலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவோர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் த ஹேக் நகரைத் தளமாகக் கொண்ட அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், இந்தத் தீர்ப்பு எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இறுதியானவை, சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியவை என்றாலும், தீர்ப்பை மதிக்கத் தவறினால் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் புகாரளிப்பதைத் தவிர அதனை நேரடியாக அமல்படுத்த நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை. இதற்கிடையே, இந்தத் தீர்ப்பு நியாயமற்றது என மியன்மார் அரசாங்கம் வெள்ளிக்கிழமையன்று நவம்பர் 20ஆம் தேதி நிராகரித்தது.

குறிப்புச் சொற்கள்