போர்ட் டிக்சன்: மலேசிய இந்தியர் இளையர் மன்றம், செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தனது 30வது ஆண்டுப் பொதுப் பேரவையைப் போர்ட் டிக்சனில் உள்ள குளோரி பீச் ரிசோர்ட்டில் நடத்தியது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 300 பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவை நெகிரி செம்பிலான் முதல் அமைச்சர் ஹாஜி அமினுடின் ஹாஜி ஹருண் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். சமுதாயம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளையர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து அவர் ஆற்றிய உரையில் வலியுறுத்தினார்.
மலேசிய இந்தியர் இளையர் மன்றம் போன்ற இளையர் மன்றங்கள் வருங்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கும், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுய முன்னேற்ற வாய்ப்புகள் மூலம் இளையர்களை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இளையர்கள் அறிவு, நேர்மை, தன்னம்பிக்கையுடன் முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். “மாநிலம் மற்றும் நாட்டின் பலம், பல்லின மக்களின் ஒற்றுமையில் இருப்பதாக அரசாங்கம் நம்புகிறது. நெகிரி செம்பிலான் மாநிலமானது மலாய், சீன, இந்திய மற்றும் பல்வேறு இனத்தவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களின் பிணைப்பால் உருவானது. இவர்களே மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பங்காற்றுகின்றனர். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளையர்கள் ஒன்றிணைந்து இன்னும் வலுவான, நிலையான, வளமான எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும்,” என முதல் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதே நிகழ்வில், GenRLS 2.0 (Generation Rise, Lead, Serve) எனப்படும் மலேசிய இந்தியர் இளையர் மன்றத்தின் தலையாயத் திட்டத்தின் அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்வை அவர் முன்னின்று நடத்தி வைத்தார்.
இத்திட்டம் மலேசிய இந்திய இளையர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சியாகும். இந்த திட்டம், மலேசிய தேசிய பயிற்சிக் கழகத்துடன் இணைந்து, ‘மலேசியா மடானி’ தேசியப் பாடநெறி மற்றும் மலேசிய இந்தியர் இளையர் மன்றத்தின் தலைமைத்துவ வலுப்படுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளையர் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், மலேசிய இந்தியர் இளையர் மன்றத்தின் திட்டங்களையும் முயற்சிகளையும் வலுப்படுத்துவதற்காக 20,000 ரிங்கிட் மானியத்தையும் முதல் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ தஞ்சுங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜசேகரன் குணசேகரன், செரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பழனிசாமி, நெகிரி செம்பிலான் இளையர் மன்றத் தலைவர் முகமது ஃபைரோஸ் ருஸ்லி, இளையர் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதிநிதிகள், பிற இளையர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். மலேசிய இந்திய இளையர்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அமைப்பின் எதிர்காலப் பயணத்தைப் பற்றி விவாதிக்க நாடு முழுவதிலுமிருந்தும் வந்த பேராளர்களின் முக்கியத் தளமாக இந்த 30வது ஆண்டுப் பொதுப் பேரவை அமைந்தது என்று தமிழ் மலர் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதற்கும், இளையர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாநில அரசு தொடர்ந்து அளித்து வரும் அதரவை மதிக்கும் வகையில் முதல் அமைச்சர் ஹாஜி அமினுடினுக்கு மலேசிய இந்தியர் இளையர் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

