போர் தாக்கத்தால் ஈரானில் சுழற்சிமுறை மின்தடை அமல்

போர் தாக்கத்தால் ஈரானில் சுழற்சிமுறை மின்தடை அமல்

படம்: இபிஏ

22 Nov 2026 - 5:05 pm

1 mins read

டெஹ்ரான்: மத்திய கிழக்குப் போரின்போது முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தால் ஏற்கெனவே கடுமையாக இருந்த எரிசக்தி நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) முதல் சுழற்சிமுறையில் மின்தடையை அமல்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“நாட்டின் எரிபொருள் விநியோக நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் மின் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் மின்சாரத் துறை உள்ளது,” என்று ஈரானின் தேசிய மின்சார நிறுவனத்தின் தலைவர் முகம்மது அல்லாதாத் சனிக்கிழமையன்று (நவம்பர் 21) தெரிவித்தார்.

பகுதிகளுக்கு ஏற்ப இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஏறத்தாழ இரண்டு மணிநேரமும் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வரையும் இந்த மின்தடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஈரான் அண்மைய ஆண்டுகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக நவம்பர் 21ஆம் தேதி பேசிய ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் குளிர்காலத்துக்கு முன்னதாக எரிசக்திப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்