ரோன்95 பெட்ரோல்: தவறான காணொளிகளைப் பரப்ப வேண்டாமென அதிகாரி வேண்டுகோள்

ரோன்95 பெட்ரோல்: தவறான காணொளிகளைப் பரப்ப வேண்டாமென அதிகாரி வேண்டுகோள்

2 mins read
0877f31f-af6c-4208-bde1-75a56fe4572e
ஜோகூர் பாருவில் வாகனங்களுக்கு எண்ணெய் நிரப்பும் ஓட்டுநர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: சலுகை விலை பெட்ரோல் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்படுவதாகப் பொதுமக்கள் வேண்டுமென்றே குற்றஞ்சாட்டக்கூடாது என்று மலேசிய பெட்ரோல் வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது.

காணொளிப் படங்களை எடுத்து பெட்ரோல் நிலையங்களைக் குறைகூறும் செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது என்று சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

‘மைகாட்’ தேசிய அடையாள அட்டை இல்லாத வெளிநாட்டினரும் நிரந்தரவாசிகளும் சலுகையற்ற ரோன்95 பெட்ரோலை வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று சங்கத்தின் தலைவர் கைருல் அனுவார் அப்துல் அசிஸ் தெரிவித்தார். அதற்கு அவர்கள் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.

“வாகனப் பதிவெண்ணைப் பொறுத்தது. குடியுரிமையைப் பற்றியது அன்று,” என்று திரு கைருல் அனுவார் புதன்கிழமை (ஏப்ரல் 29) கூறினார்.

1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் செய்யப்பட்ட அண்மைத் திருத்தத்தை அவர் வரவேற்றார். பெட்ரோல் நிலையங்களை மட்டும் குற்றம் சுமத்தாமல் சலுகைக் கட்டமைப்பை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை ஓட்டுவோர்மீது அது பொறுப்பைச் சுமத்துகிறது.

“அண்மைத் திருத்தம் மேலும் நடுநிலையான, நியாயமான சட்ட அமலாக்க முறையை நோக்கிய முக்கிய முன்னேற்றம்,” என்றார் திரு கைருல் அனுவார்.

சில வேளைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் ரோன்95 பெட்ரோலை மோட்டார்சைக்கிளுக்குப் பயன்படுத்துகின்றனர். அதுபோன்ற நேரங்களில், வேகமாகப் பரவும் போலிக் காணொளிகளைக் கையாள வேண்டியிருப்பதாக பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் கூறினார்.

“வெளிநாட்டவர் ரோன்95 பெட்ரோலை நிரப்பினாலே மக்கள் காணொளிகள், படங்களை எடுத்து, நிலையத்தின் பெயரையும் குறிப்பிட்டு இணையத்தில் பதிவிடுகின்றனர். பின்னர் அவை வேகமாகப் பரவுகின்றன,” என்றார் அவர்.

“வாகனம், வெளிநாட்டுப் பதிவெண்ணைக் கொண்டுள்ளதா இல்லையா என்று பார்க்காமலேயே அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்,” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்