அசுன்சியோன்: முன்னாள் காற்பந்து நட்சத்திரம் ரொனால்டினோவிடம் போலிக் கடப்பிதழை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பராகுவே நாட்டுப் பெண்மணிக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 13) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்பெண்ணுக்கு பராகுவேயில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் பிரேசிலியக் காற்பந்துப் பிரபலம் ரொனால்டினோ முன்னதாக ஐந்து மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.
அவருக்குப் போலிக் கடப்பிதழ் வழங்கியதாக நம்பப்பட்ட 55 வயது டாலியா லோப்பெஸ் எனும் மாது ஆறு ஆண்டுகளாகச் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தார். இம்மாதம் இரண்டாம் தேதி அவர் பராகுவே தலைநகர் அசுன்சியோனில் பிடிபட்டார்.
அதிலிருந்து அவர் காவல்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வந்தார்.
ரொனால்டினோ என்றழைக்கப்படும் ரொனால்டோ டி அசிஸ் மொரெய்ராவுக்கும் அவரது சகோதரரும் அவரைப் பிரதிநிதிக்கும் முகவருமான ராபர்ட்டோ டி அசிஸ் மொரெய்ராவுக்கும் போலி ஆவணங்களை வழங்கியதாகவும் அவர்களுடன் குற்றரீதியான தொடர்பு வைத்திருந்ததாகவும் லோப்பெஸ்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரொனால்டினோவும் அவரது சகோதரரும் எதற்காகப் போலி கடப்பிதழை நாடினர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
லோப்பெஸ், 2020ஆம் அண்டு மார்ச் மாதம் பராகுவேயில் வசதி குறைந்த சிறாருக்கான நன்கொடை நிகழ்ச்சியில் ரொனால்டினோ கலந்துகொள்ள ஏற்பாடு செய்தார். பராகுவேயைச் சென்றடைந்து இரண்டு நாள்கள் கழித்து போலி பராகுவே கடப்பிதழ்கள், போலி அடையாள அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு பயணம் செய்ததன் தொடர்பில் ரொனால்டினோவும் அவரின் சகோதரரும் கைது செய்யப்பட்டனர்.

