மணிலா விமான நிலையத்தில் திடீரெனச் சரிந்த மேற்கூரை; 7 பேர் காயம்

காயமடைந்தவர்களுக்குச் சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன

மணிலா விமான நிலையத்தில் திடீரெனச் சரிந்த மேற்கூரை; 7 பேர் காயம்

படம்: ஃபேஸ்புக்/JOHNMARK FLORENDO

03 Apr 2026 - 8:48 pm

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நினாய் அக்கியூனோ அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1ல் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்தது.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) காலை 10.43 மணிவாக்கில் நடந்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. பயணிகள் காத்திருப்புப் பகுதியில் உள்ள நாற்காலி அமைந்திருக்கும் இடத்தில் கூரை சரிந்து விழுந்தது.

காயமடைந்தவர்களில் ஒருவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களுக்குச் சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் சீரான உடல் நலத்துடன் இருப்பதாகவும் விமான நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

எதனால் கூரை சரிந்து விழுந்தது என்பது குறித்து விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த முனையத்தில் வழக்கம் போல் செயல்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்