கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், ஏழு மில்லியன் ரிங்கிட் (S$2.1 மில்லியன்) மதிப்பிலான பணமோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது தொடர்பான 12 குற்றச்சாட்டுகளும் வருமானம் குறித்து உள்நாட்டு வருவாய் வாரியத்துக்குத் தெரிவிக்கத் தவறியதன் தொடர்பிலான ஐந்து குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து மலேசிய உயர் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
நீதிபதி கே முனியாண்டி அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னதாக, தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்ற அடிப்படையில் அவற்றைத் தள்ளுபடி செய்யும்படிக் கோரி திருவாட்டி ரோஸ்மா மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி அந்த மனுவிற்கு ஒப்புதல் வழங்கினார்.
இவ்வழக்கில் இருவர் சாட்சியமளித்ததாக ‘த ஸ்டார்’ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் (AGC), டிசம்பர் 19ஆம் தேதி தெரிவித்தது.
பிறந்தநாள் மாதத்தில் குற்றச்சாட்டுகளிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டதைப் ‘பொருளுள்ள வரம்’ என்று குறிப்பிட்டுள்ளார் திருவாட்டி ரோஸ்மா. ஆறு ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு இவ்வழக்கு சுமுகமாக முடிவுற்றது குறித்து நிம்மதி அடைவதாக அவர் கண்ணீர்மல்கக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கத்திலிருந்தே தமது வழக்கறிஞர்கள் இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவந்தபோதும் எதையும் உறுதியாகக் கருத இயலாத நிலையிலிருந்ததாக அவர் சொன்னார்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருவாட்டி ரோஸ்மா, “இதைத்தான் நீதி என்று நான் குறிப்பிடுவேன்,” என்றார்.