புத்ரா ஜெயா: சிங்கப்பூரில் உள்ள தனது மகளைப் பார்க்க ஏப்ரல் 30ஆம் தேதி வரை ரோஸ்மா மன்சோர் தனது கடப்பிதழைத் தற்காலிகமாக விடுவிப்பதற்குச் சமர்ப்பித்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) ஏற்றுக்கொண்டது.
நீதிபதி அஸ்மி அரிஃபின், நூரின் பதருடின், மியோர் ஹாஷிமி அப்துல் ஹமிட் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமர்வின் முன் இணையவழி விசாரணையின்போது ரோஸ்மாவின் வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் விண்ணப்பம் செய்தார்.
அரசுத் தரப்புக்காக முன்னிலையான வழக்கறிஞர் கே.மங்கை, விண்ணப்பத்தை எதிர்க்காததால், நீதிபதி அஸ்மி, இந்த மனுவை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா, இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கும் வகையில், நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தனது கடப்பிதழை விடுவிக்கக் கோரி வருவதாக திரு ஜக்ஜித் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், பிப்ரவரி 20 முதல் 26 வரை ரோஸ்மா, அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான முகமது ஜைனி மஸ்லானை, கலப்பின சூரிய மின்சக்தி திட்டத்துடன் தொடர்புடைய ஊழல் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பம் தொடர்பான மேல்முறையீட்டு விசாரணைக்காக (பிப்ரவரி 25 அன்று நடைபெறும்) கோலாலம்பூருக்குத் திரும்புவார் என்று திரு ஜக்ஜித் கூறினார்.

