புதிய ஆதாரங்களைச் சேர்க்க அனுமதி கோரும் ரோஸ்மா

புதிய ஆதாரங்களைச் சேர்க்க அனுமதி கோரும் ரோஸ்மா

2 mins read
bc0e8445-b20c-447a-af88-0dca92017c09
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர். - படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: சூரியசக்தித் திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்துத் தொடுத்துள்ள மேல்முறையீட்டில், புதிய ஆதாரங்களைச் சேர்ப்பதற்கு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் அனுமதி கோரியுள்ளார்.

மேம்முறையீட்டு விசாரணையில் மேலும் மூன்று ஆவணங்களை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மலேசியக் கல்வி அமைச்சின் சூரியசக்தித் திட்டத்தில், சூரியசக்திச் சாதனங்களை வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற ஒரு நிறுவனத்துக்கு உதவியதற்காக ரோஸ்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டன.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவருக்கு அதற்குப் பதிலாகக் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தம்மைச் சிக்க வைக்கும் வகையில் அரசாங்கத் தரப்பு சாட்சியான ராயன் ரட்ஸ்வில் மீது, அழுத்தம் கொடுத்ததாகக் கூறி ரோஸ்மா மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் புதிய விவரங்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ராயன் மீண்டும் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று ரோஸ்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

கூடுதல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் ராயன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நீதித்துறைச் செயல்பாடுகளில் நியாயமான விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய இந்தச் சான்றுகள் மிக முக்கியம் என்றும் ரோஸ்மாவின் சட்டக் குழு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய மனு தொடர்பான விசாரணையை விரைவாக நடத்த நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேல்முறையீட்டு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஸ்மாவின் இந்த மனு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவழக்குஊழல்