ஜோகூர் சட்டமன்றக் கலைப்பில் அரச குடும்பத்திற்குத் தொடர்பில்லை: ஓன் ஹஃபிஸ்

ஜோகூர் சட்டமன்றக் கலைப்பில் அரச குடும்பத்திற்குத் தொடர்பில்லை: ஓன் ஹஃபிஸ்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2026 - 6:16 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதில் ஜோகூர் அரண்மனைக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதை இடைக்கால முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி மறுத்துள்ளார். முன்னாள் சட்டமன்ற நாயகர் புவாட் ஸர்கா‌ஷி முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.

திரு புவாட் கூறிய கருத்துகள், அரசமைப்பு நடைமுறையைத் திரித்துக்கூறுவதைப் போன்று அமைந்துள்ளதாகத் திரு ஓன் ஹஃபிஸ் குறிப்பிட்டார். பாரிசான் நே‌ஷனல் கூட்டணியின் ஜோகூர் மாநிலத் தலைவராக இருக்கிறார் திரு ஓன் ஹஃபிஸ்.

முன்னதாகத் திரு புவாட், அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்னோ கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஜோகூர் அம்னோவின் விவகாரங்களில் வெளித்தலையீடுகள் இருப்பது குறித்து அவர் அக்கறை தெரிவித்தார்.

ஜோகூர் சட்டமன்றத்தைக் கலைக்க அரண்மனை உத்தரவிட்டதாகத் தாம் ஒருபோதும் திரு புவாடிடம் சொல்லவில்லை என்று திரு ஓன் ஹஃபிஸ் கூறினார்.

அத்தகைய குற்றச்சாட்டைத் தாம் திட்டவட்டமாய் மறுப்பதாக ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப, ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயில் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே சட்டமன்றம் கலைக்கப்பட்டது என்று திரு ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

முதல்வரின் விருப்பப்படி சட்டமன்றத்தைக் கலைக்க முடியாது என்றார் அவர். அரசமைப்புச் சட்டங்களுக்கு ஏற்ப அந்த நடைமுறை இடம்பெற வேண்டும் என்றும் அரச குடும்பத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னரே அது நடப்புக்கு வரும் என்றும் திரு ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

“ஆட்சியாளரைச் சந்தித்து இந்த விவகாரத்தை முன்வைத்தேன். அவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதை மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்தேன்,” என்றார் அவர்.

ஜோகூர் அம்னோவின் அரசியல் விவகாரங்களில் அரண்மனை தலையிடுவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில், சட்டபூர்வ அரசமைப்பு நடைமுறையைத் தவறாகச் சித்திரிப்பது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக ஜோகூர் அம்னோ பிரிவு, காவல்துறையில் புகார் அளிக்கும் என்று திரு ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார். அத்துடன், அனைத்துத் தரப்பினரும் அரச குடும்பத்தை மதித்துநடக்க வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர்சட்டமன்றம்கலைப்புதேர்தல்மாமன்னர்