நீலாய்: பல்வேறு கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை மலேசியக் காவல்துறை, வியாழக்கிழமை (மே 15) சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலாயில் உள்ள கூட்டுரிமை வீடு ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் இரவு 10 மணிக்கு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முறையே 40, 20 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பேராக் உட்பட மலேசியாவின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், ‘கூரியர்’ சேவை நடுவம் போன்ற இடங்களில் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவு துணை இயக்குநர் ஃபாடில் மார்சஸ் இதைத் தெரிவித்தார்.
“40 வயது சந்தேகப் பேர்வழி மீது வன்செயல், போதைப்பொருள் தொடர்பான 76 குற்றப்பதிவுகள் உள்ளன. மற்றவர் மீது அதேபோன்ற 11 குற்றப்பதிவுகள் உள்ளன,” என்று செய்தியாளர்களிடம் திரு ஃபாடில் கூறினார்.
வியாழக்கிழமை இரவு அவ்விருவரும் காரில் தப்பிச் செல்ல முயன்றதாகவும் காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது அந்த ஆடவர்கள் காவல்துறை வாகனத்தை நோக்கிச் சுட்டதாகவும் அவர் சொன்னார்.
அந்தத் துப்பாக்கிச்சூட்டில் அதிகாரிகள் யாருக்கும் காயமில்லை.
சம்பவ இடத்தில் இரு துப்பாக்கிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் இரு மாதங்களுக்கு முன்னர் கிள்ளானில் உள்ள ‘கூரியர்’ சேவை நடுவத்தில் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் அக்கும்பல் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையது என்றும் கூறப்பட்டது.
கும்பலைச் சேர்ந்த மற்றவர்களைக் காவல்துறை வலைவீசித் தேடி வருவதாகத் திரு ஃபாடில் கூறினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை மாற்றியதாகவும் வாடகை காரின் பதிவெண் பலகையை இரு நாள்களுக்கு ஒருமுறை மாற்றியதாகவும் நம்பப்படுவதாக அவர் சொன்னார்.

