கோலாலம்பூர்: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு (ஆர்டிஎஸ்) ரயில் திட்ட கட்டுமானம், ஜூலை நிலவரப்படி ஜோகூர் பாருவில் 83 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
2027 ஜனவரி 1ஆம் தேதி ரயில் திட்டம் நடப்புக்கு வருவதை முன்னிட்டு, அந்த ரயில் பாதைக்கான கட்டுமானம் திட்டமிட்டபடி நடந்து வருவதாக அவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) சொன்னார்.
புக்கிட் சகாரில் குடிநுழைவு, சுங்கத்துறை, தனிமைப்படுத்தல் நிலையத்துக்கான கட்டுமானமும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்நிலையில், இஸ்கந்தர் மலேசியா வட்டாரத்துக்கான போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்றையும் தமது அமைச்சு மறுஆய்வு செய்து வருவதாக திரு லோக் தெரிவித்தார்.
ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பு மேம்பாடுகளை இத்திட்டம் மெருகூட்டும். ஜோகூர் பாருவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இது ஒட்டுமொத்த போக்குவரத்து நிலவரத்தை மேம்படுத்தும்.
இம்முயற்சி, அதிக எண்ணிக்கையில் வரும் பயணிகளைக் கவனிப்பதில் மட்டுமின்றி பொருளியல் வளர்ச்சிக்கு மெருகூட்டுவது, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை உருவாக்குவது ஆகியவற்றுக்காகவும் மேற்கொள்ளப்படுவதாக திரு லோக் குறிப்பிட்டார்.
“குடிநுழைவு, சுங்கத்துறை, தனிமைப்படுத்தல் நிலையம், இப்ராகிம் அனைத்துலக வர்த்தக வட்டாரம் (ஐஐபிடி) ஆகியவற்றுக்கு நேரடியாகச் செல்ல வகைசெய்யும் நோக்கில் நிலவழிப் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சிகளும் திட்டத்தில் அடங்கும்,” என்று திரு லோக் விவரித்தார்.
அந்த வகையில், புக்கிட் சகாரின் சுற்றுவட்டாரத்தில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான முதலீடுகளில் 200 மில்லியன் ரிங்கிட்டுக்கும் (59.77 மில்லியன் வெள்ளி) அதிக மதிப்புள்ளவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாக அவர் தெரிவித்தார். அத்தகைய முதலீடுகள், தற்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்வது மட்டுமின்றி வருங்காலத் திட்டங்களுக்கும் கைகொடுக்கும் என்று அவர் சுட்டினார்.